ஜெர்மனி பல்கலை தமிழ்த்துறைக்கு நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஐரோப்பிய தமிழர்கள் நன்றி

சென்னை: ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தொடர்ந்து, தொய்வின்றி இயங்க ரூ.1.25 கோடி நிதியுதவி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை 58 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. நிதிப்பற்றாக் குறையால் தமிழ்ப் பிரிவை மூடுவதாக பல்கலைக்கழக சமீபத்தில் நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை தொடர்ந்து தொய்வின்றி, இயங்கிட தமிழக அரசின் சார்பில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.  

இதற்காக ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளார்கள். மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், அர்ப்பணிப்புடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு தமிழுக்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் அளிப்பதோடு, தமிழ்மொழியின் தொடர் பயன்பாட்டிற்கும், முன்னேற்றத்துக்கும் வலுச்சேர்த்து பல சர்வதேச பல்கலைக்கழகங்களில் தமிழ் இடம்பெறும் வண்ணம் இந்த நிதியுதவி அமைந்துள்ளது என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்கள்.

கொலோன் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற மூத்த தமிழ் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், தமிழுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் தங்களின் ஆட்சி குறுகிய காலத்திலேயே இதனை பரிசீலித்து தக்க சமயத்தில் நிதியுதவி அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.

Related Stories: