×

சக்கர நாற்காலி போயே போச்சு அன்று கூடைபந்து இன்று நடனம்: பாஜ பெண் எம்பி பிரக்யா கலக்கல்

போபால்: சர்ச்சைக்கு பெயர் போன பாஜ எம்பி. பிரக்யா சிங் தாகூர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் பகுதியில் கடந்த 2008ல் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக, போபால் தொகுதி பாஜ எம்பி. பிரக்யா சிங் தாக்கூர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்போது, இந்த வழக்கு விசாரணை என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 9 ஆண்டுகள் சிறையில் இருந்த பிரக்யாவுக்கு 2017ல் ஜாமீன் கிடைத்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது தன்னால் எழுந்து நடக்க முடியாது என்று நேரில் ஆஜராவதி,் இருந்து விலக்கு கோரியதை தொடர்ந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுவெளியில் கூட அவர் சக்கர நாற்காலியில் தான் வலம் வருவார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் போபாலில் உள்ள மைதானத்தில் அவர் கூடைப்பந்து விளையாடும் வீடியோ வெளியானது. எழுந்து நடக்க முடியாதவரால் எப்படி கூடைபந்து விளையாட முடிந்தது? என நெட்டிசன்களும் எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பினர்.

இந்தச் சர்ச்சை அடங்குவதற்குள், போபாலில் உள்ள அவரது வீட்டில் நடந்த திருமண விழாவில் நடனமாடும் வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அவர் நடனமாடிக் கொண்டு சுற்றி இருந்தவர்களையும் நடனமாட அழைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. தனது  தொகுதியை சேர்ந்த ஏழை மணமக்கள் இருவருக்கு பிரக்யா சிங் தனது வீட்டிலேயே திருமணம் செய்து வைத்த போது, மணமக்களை மகிழ்விக்க அவர் நடனமாடியதாக கூறப்படுகிறது.

மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நரேந்திர சலூஜா தனது டிவிட்டரில், `போபால் எம்பி, சகோதரி பிரக்யா தாகூரை சக்கர நாற்காலியில் மட்டுமே பார்த்திருக்கிறோம். அவர் கூடைப்பந்து விளையாடுவதும், எவ்வித துணையுமின்றி நடப்பது, மகிழ்ச்சியாக நடனமாடுவது நம்மையும் மகிழ்விக்கிறது அல்லவா? கடவுள் அவருக்கு நல்ல உடல் நலத்தை அளிக்கட்டும்,’ என்று நகைப்புடன் கூறியுள்ளார்.

Tags : Poe Pochu ,Pragya Kalakal , Wheelchair, basketball, dancing, BJP female MP Pragya
× RELATED அஜித் பவாரின் மனைவி மீதான ரூ.25,000 கோடி வங்கி மோசடி வழக்கு மூடப்பட்டது