பக்ரைச்: உத்தரப் பிரதேசத்தில் இன்று மண்டல பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தொகுதி மேம்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு தகுதி வாய்ந்தவர்கள். இந்நிலையில், தினப்புர்வா கிராமத்தில் பாஜ வேட்பாளராக சரிதா யாக்யாசைனி போட்டியிடுகிறார். இவரது கணவர் தனது ஆதரவாளர்களுடன் தொகுதி மேம்பாட்டு கமிட்டி உறுப்பினர் யாதுரை தேவியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவரது வாக்கை பெறுவதற்காக பாஜவினர் அவரை கடத்த முயன்றுள்ளனர்.
அங்கிருந்த அவரது உறவினர் மாயாராம்(60) இதனை தடுக்க முயன்றுள்ளார். அவர்கள் தங்களது கையில் இருந்து துப்பாக்கியினால் அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே கவுசாம்பி மாவட்டத்தில் சிராத்து பகுதியில் சுயேச்சை வேட்பாளரின் வீட்டில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தொகுதி மேம்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் 18 பேர் பிடித்து கடத்தி வந்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் விடுவித்தனர்.