×

கோபா கோப்பை பைனல் பிரேசில்-அர்ஜென்டினா நாளை பலப்பரீட்சை

ரியோ டி ஜெனீரோ: கோபா கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில்  நடப்பு சாம்பியன் பிரேசிலும்,  அதிகமுறை கோப்பையை வென்ற உருகுவே சாதனையை சமன் செய்யும் இலக்கில் அர்ஜென்டினாவும் பைனலில் நாளை மோதுகின்றன. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் தோற்ற பெரு - கொலம்பியா அணிகள் இன்று 3வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதிய நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் பிரேசில் - அர்ஜென்டினா மோதவுள்ளன. இப்போட்டி இந்திய நேரப்படி  நாளை காலை 5.30க்கு ரியோ டி ஜெனீரோ நகரில் தொடங்கி நடக்கிறது. நடப்பு சாம்பியனான  பிரேசில்  கோப்பையை தக்க வைத்துக் கொள்ள  எல்லா முயற்சிகளையும் களத்தில் பயன்படுத்தும்.  இந்த ஆட்டத்தில் வென்றால் 10வது முறையாக கோப்பை வென்ற சாதனையையும் பிரேசில் படைக்கும்.

ஏற்கனவே 20 முறை பைனலில் விளையாடி உள்ள பிரேசில் 9 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இப்போது 21வது முறையாக விளையாடும் இறுதி ஆட்டத்திலும் கோப்பை வெல்ல கார்லோஸ் காஸ்மிரா  தலைமையிலான அணியில் நட்சத்திர ஆட்டக்கார் நெய்மர், சில்வா, லூகாஸ்,  ரிச்சர்லிசன்,   எவர்டன் சோரெஸ்,   ஃபிரெட் என பலரும் முனைப்பு காட்டுவார்கள். சிலிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்ட கேப்ரியல் ஜீசஸ்  அரையிறுதியில் விளையாட முடியவில்லை. அவர் இப்போது அணிக்கு திரும்புவது பிரேசிலுக்கு  கூடுதல் பலமாக இருக்கும். அதற்கு சற்றும் சளைத்ததில்லை அர்ஜென்டினா. அந்த அணி இதுவரை 28 முறை கோபா கோப்பை பைனலில் விளையாடி 14 முறை கோப்பையை வென்றுள்ளது. கோபா கோப்பையை அதிக முறை  வென்ற உருகுவேயின் சாதனையை (15 முறை) சமன் செய்ய அர்ஜென்டினா வரிந்துகட்டுகிறது.

அதற்காக கேப்டன் மெஸ்ஸி தலைமையில் செர்ஜியோ, ரோட்ரிகோ, மார்டினெஸ்,  கோன்சாலெஸ்,  கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் ஆகியோரும் கலக்க காத்திருக்கிறார்கள். கோபா கோப்பை  தொடங்கிய  1916 முதல்  இதுவரை  இந்த இரு அணிகளும்  10 முறை பைனலில் மோதியுள்ளன. அவற்றில் 2000ம் ஆண்டு வரை மோதிய 8 இறுதி ஆட்டங்களிலும் அர்ஜென்டினாதான் வென்று கோப்பையை கைப்பற்றி உள்ளது. அதே நேரத்தில் 2000ம் ஆண்டுக்கு பிறகு மோதிய 2 இறுதி ஆட்டங்களிலும்  பிரேசில்தான் வெற்றி வகை சூடியுள்ளது. எனவே   2000ம் ஆண்டுக்கு பிறகு இந்த இரு அணிகளும் மோதும் 3வது இறுதி ஆட்டத்தில் வெல்லப்போவது பிரேசிலா? அர்ஜென்டீனாவா? என்று ஆவலுடன் கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்...

நேருக்கு நேர்
அர்ஜென்டினா-பிரேசில் இதுவரை 111 முறை சர்வதேச ஆட்டங்களில் மோதியுள்ளன. அவற்றில்  பிரேசில்  46 ஆட்டங்களிலும், அர்ஜென்டினா 40 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. 25 ஆட்டங்கள் சமனில் முடிந்துள்ளன.

கோபா கோப்பையில்
கோபா கோப்பை தொடரில் 33 முறை மோதியதில் அர்ஜென்டினா 15 - 10 என முன்னிலை வகிக்கிறது (8 டிரா).

கடைசியாக...
அர்ஜென்டீனா கடைசியாக மோதிய 10 சர்வதேச ஆட்டங்களில்  ஒன்றில் கூட தோற்கவில்லை. அவற்றில்  6 வெற்றி, 4 டிரா செய்துள்ளது. பிரேசிலும் கடைசியாக  தான் விளையாடிய 10 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்கவில்லை. அவற்றில் 9 வெற்றி, ஒரு டிரா செய்துள்ளது.

Tags : Copa del Rey ,Brazil ,Argentina , Copa Cup, Brazil, Argentina, Multi-Test
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...