×

ஜம்மு காஷ்மீரில் 2011 கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

புதுடெல்லி:  ‘ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்,’ என தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.  ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொகுதி மறுவரையறை குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஜம்மு காஷ்மீர் சென்று, அரசியல் தலைவர்கள், குழுக்களுடன், பொதுமக்களுடன் கலந்துரையாடினர்.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நேற்று கூறுகையில், ”ஜம்மு காஷ்மீரில் கூடுதலாக 7 சட்டப்பேரவை தொகுதிகள் உருவாக்கப்படும். 2011ம் ஆண்டு  மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்.  தொகுதி மறுவரையறை குறித்த வரைவு தயாரிக்கப்பட்டு,  பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்படும். பின்னர், தொகுதி மறுவரையறை இறுதி செய்யப்படும்” என்றார்.

* ஜம்மு காஷ்மீரில் 1981ல் தொகுதி வரையறை ஆணையம் அமைக்கப்பட்டது.
* இந்த ஆணையம் 14 ஆண்டுகளுக்கு பின் 1995ல் தனது பரிந்துரையை வழங்கியது.
* அதன் பிறகு ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையறை செய்யப்படவில்லை.

Tags : Jammu and ,Kashmir , Jammu and Kashmir, constituency redefinition, Chief Election Commissioner
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...