×

மலையேறினால் மூச்சு வாங்கும் வீரர்கள் இந்திய எல்லையில் திபெத் வாலிபர்கள் படை: சீனா புதிய திட்டம்

புதுடெல்லி: வானுயர மலைகளும், காடுகளும் நிறைந்த இந்திய எல்லைப் பகுதிகளில் நிறுத்துவதற்காக, திபெத் வாலிபர்கள் கொண்ட ராணுவ படையை சீனா உருவாக்குகிறது. இந்தியா - சீனா இடையே 1962ல் நடந்த போருக்கு பின், திபெத்தில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்து நிரந்தரமாக தங்கி விட்ட வாலிபர்களை கொண்டு, ‘சிறப்பு எல்லைப் படை’ (எஸ்எப்எப்) உருவாக்கப்பட்டது. இது, பிரதமர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்திய ராணுவமும், அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ.வும் இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளது.

இவர்கள், எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலை ஒடுக்க, உளவு பார்க்க களமிறக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் தனிச்சிறப்பு மிக்க கண்காணிப்பு, உதவியால்தான் கிழக்கு லடாக்கில் மொக்பாரி, பிளாக் டாப் உள்பட 3 மலை முகடுகளை சீன ஆக்கிரமிப்பில் இருந்து இந்திய ராணுவத்தால் மீட்க முடிந்தது. சீன வீரர்களால் மலையேற முடியாது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி திணறுவது வழக்கம். அதனால், இந்திய பகுதிகளை அவர்களால் நினைத்தபடி ஆக்கிரமிக்க முடிவதில்லை. சமீபத்தில், பாங்காங் திசோ ஏரிப் பகுதியில் எஸ்எப்எப் படையின் திறமை வெளிப்பட்டதை பார்த்த சீன அரசு, திபெத் இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்து, இந்திய எல்லையில் தாக்குதல் நடத்துவதற்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறது.

அவர்களுக்கு சீன மொழியை கற்று கொடுப்பதுடன், தலாய்லாமா போன்ற மதக்குருக்களை விட சீன கம்யூனிஸ்ட் கொள்கைகளே சிறந்தவை என்றும் போதிக்கப்படுகிறது.  திபெத்தியர்கள் மலைபாங்கான பகுதிகளில் வசித்து பழக்கப்பட்டவர்கள். உயரமான மலைகளை மூச்சுத் திணறல் இல்லாமல் ஏறுவது இவர்களுக்கு ஒரு பிரச்னையே கிடையாது. எனவே, லடாக் போன்ற மலைப்பாங்கான பிரதேசங்களில் இவர்களை நிறுத்துவதன் மூலம் சீன ராணுவத்தினருக்கு இருக்கும் அழுத்தத்தை குறைக்க முடியும் என சீன ராணுவம் கருதுகிறது.

200 சீனர்கள் நாடு திரும்பினர்
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தனது முழு ராணுவமும் திரும்ப பெறப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட சீனர்களின் பாதுகாப்புக்கு தலிபான் தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதால், சிறப்பு விமானம் மூலம் அவர்களை சீன அரசு தனது நாட்டுக்கு அழைத்து வந்துள்ளது. இவர்களில்  22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Tags : Indian ,China , Mountain, Soldiers, Indian Frontier, Tibetan Youth Force
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்