கொரோனா 3வது அலையை சமாளிக்க 1500 ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணி தீவிரம்: பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள போதிய ஆக்சிஜன் இருப்பு மற்றும் உற்பத்தி தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. கொரோனா 2வது அலையில் நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை பலரது உயிரையும் பறித்தது. ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு வர நோயாளிகளின் உறவினர் பெரிதும் சிரமப்பட்டனர். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி இன்றி, உயிர் பிழைக்க வேண்டிய பலர் சிகிச்சைக்கு வழியின்றி இறந்தனர்.  இதற்கிடையே, அக்டோபரில் கொரோனா 3வது அலை தாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில் நாடு முழுவதும் ஆக்சிஜன் இருப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான தகவல்களை அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது, ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய நாடு முழுவதும் 1500 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், இதன் மூலம், 4 லட்சம் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைக் கேட்ட பிரதமர் மோடி ஆலைகள் நிறுவப்பட்டு, அவை செயல்படுவதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் இதற்கான பணிகளை அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து உன்னிப்பாக கவனித்து செயல்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

இந்த ஆக்சிஜன் ஆலைகள் பிஎம் கேர்ஸ், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் நிறுவப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதில், ‘ஆக்சிஜன் ஆலைகளை பராமரித்தல் மற்றும் செயல்படுத்துவது குறித்து மருத்துவமனை ஊழியர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்காக, 8000 பேரை தயார்படுத்த வேண்டும். ஆக்சிஜன் ஆலைகள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு போன்றவற்றை கண்காணிக்க இன்டர்நெட் ஆப் திங்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்,’ என கூறப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

* நாடு முழுவதும் ஒருநாள் பாதிப்பு 40 ஆயிரத்திற்கு குறைவாக இருந்த நிலையில் மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கையை நேற்று காலை 8 மணிக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

* மொத்த பாதிப்பு 3 கோடியே 7 லட்சத்து 52 ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் 911 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 939.

* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்து 727 ஆக உள்ளது.

* தடுப்பூசி போடும் பணி தொடங்கி 174 நாட்களில் 36.89 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18-44 வயதினர்களுக்கு 11.18 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

*மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் 1.70 கோடி டோஸ் கையிருப்பு உள்ளது.

உபியில் 9 மருத்துவ கல்லூரி

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்கு அடுத்த வாரம் 9 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். தியோரியா, ஈடா, பெதாப்பூர், காஜிபூர், ஹர்தோய், ஜனுபூர், மிர்சாபூர், பிரதாப்கர், சித்தார்த்த நகர் ஆகிய பகுதிகளில் வரும் 15,16ம் தேதிகளில் மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழா நடக்க உள்ளது. உபியில் கடந்த 2017ல் 12 மருத்துவ கல்லூரிகள் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை 48 ஆக உயர உள்ளது. இதில் 13 கல்லூரிகள் கட்டுமானப் பணியில் உள்ளன.

Related Stories:

More