பெரியார், அண்ணாமலை, காமராஜர் பல்கலைகளில் பதவி உயர்வில் முறைகேடு விசாரணை நடத்த உத்தரவு: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

சென்னை: தமிழகத்தில் இயங்கி வரும் 3 பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரின் பேரில் அந்த பல்கலைக் கழகங்களில் விசாரணை நடத்த ஆய்வுக் குழு ஒன்றை உயர்கல்வித்துறை அமைத்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக கழகம், சிதம்பர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நிர்வாக ரீதியாக பேராசிரியர்களுக்கு பதவி உயர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக உயர்கல்வித்துறைக்கு பல புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து இருந்தார். அதன் பேரில் தற்போது ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு ஒன்றை உயர்கல்வித்துறை அமைத்துள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக உயர் கல்வித்துறையின் துணைச் செயலாளர் சங்கீதா, உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தற்போது அந்த குழு விசாரணைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. குறிப்பாக மேற்குறிப்பிட்ட 3 பல்கலைக் கழங்களின் பதிவாளர்கள் மற்றும் துணை வேந்தர்களிடம் விவரம் கேட்டுள்ளது. விவரங்கள் கிடைக்கப்பெற்றதும் உரிய விசாரணையை தொடங்கும் என்று கூறப்படுகிறது. குழுவின் அறிக்கை 3 மாதங்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. விசாரணையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், பலர் கைது செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Related Stories:

>