×

மாதம்தோறும் 2 ஆக்கிரமிப்பாவது அகற்ற உத்தரவு கோயில் நில ஆக்கிரமிப்பாளர் மீது வழக்கு பதிந்து குற்ற நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை

சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 2 ஆக்கிரமிப்புகளையாவது அகற்ற வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: நில ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் அதிகம் உள்ளன. இனி வரும் மாதங்களில் ஒவ்வொரு இணை ஆணையர், உதவி ஆணையர் குறைந்தபட்சம் 2 ஆக்கிரமிப்புகளையாவது அகற்றி கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும்.

கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் செயல்படும் வணிக நிறுவனங்கள், அதிக வாடகை பாக்கி உள்ளதை பாரபட்சம் இல்லாமல் வசூல் செய்ய வேண்டும். நில ஆக்கிரமிப்பை அதிக அளவு மீட்கும் அலுவலர்களுக்கும், வாடகை பாக்கி அதிகம் வசூலிக்கும் அலுவலர்களுக்கும் முதல்வரால் பாராட்டு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் செயலாளர் சந்திர மோகன்,  ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், இணை ஆணையர்  வான்மதி, தலைமை பொறியாளர் புவனேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து  கொண்டனர்.



Tags : Minister ,Sekarbabu , Order to remove 2 occupants per month On the temple land occupier Case registered and criminal action: Minister Sekarbabu warns
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி