×

நெல்கொள்முதல் விவகாரம் எடப்பாடிக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

சென்னை: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொத்தாம் பொதுவாக டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பற்றி குறைகூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். உப்பிலியாபுரம் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, அங்கு விவசாயிகள் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகளைக் கொண்டு வந்துள்ள நிலையில் ஆளும் கட்சியினரின் அரசியல் தலையீடு காரணமாக நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆட்சியில் உப்பிலியாபுரம் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி செயல்பட்ட கொள்முதல் நிலையங்கள் 5.  ஆனால் இப்போது செயல்படும் கொள்முதல் நிலையங்கள் 12. திருச்சியில் அவரது ஆட்சிக்காலத்தில் கடந்த ஆண்டு கொள்முதல் செய்த அளவு 2446 மெட்ரிக் டன்.

ஆனால் இந்த ஆண்டு 1.5.2021 முதல் 30.6.2021 வரை 8065 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  டெல்டா மாவட்டங்களில் 1.5.2020 முதல் 30.6.2020 வரை  2,39,534 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 1.5.2021 முதல் 30.6.2021 வரை 2,97,210 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.   எருக்கூரில்  நெல்லைச் சேமித்து  வைக்க  50000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ‘சைலோ’க்கள் அவரால் தொடங்கி வைக்கப்பட்டு இன்றளவும் முழுமையாகச் செயல்படாமல் உள்ளதையும் அதைச் செயல்படுத்த இன்னும்  14 கோடி ரூபாய் தேவைப்படும் என்பதையும் அவர் அறிவாரா? அதுமட்டுமல்ல ஆண்டொன்றுக்கு 27500 டன் அரைக்கும் திறன் கொண்ட அரிசி அரவை ஆலைகளுக்கு 50000 டன் கொள்ளளவு கொண்ட ‘சைலோ’க்கள் கட்டியதை என்னவென்று சொல்வது? தீர விசாரித்து எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்று குறிப்பிட்டுச் சொன்னால் அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது.



Tags : Minister ,Chakrabarty , Paddy procurement issue Minister Chakrabarty's reply to Edappadi
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...