×

மலைப்பகுதியில் கனமழை: சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு..! பக்தர்கள் ஏமாற்றம்

வத்திராயிருப்பு: சதுரகிரி கோயில் மலைப் பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்ததால் இன்று கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 6ம் தேதி கோயில் பகுதியில் கனமழை பெய்தததால், தாணிப்பாறை அடிவாரம் வரை உள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. அத்துடன் நேற்று முன்தினம் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக பிரதோஷத்திற்காக வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தாணிப்பறை வனத்துறை கேட் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சதுரகிரி மலையேற அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நேற்று காலை மழை பெய்யாததால் பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தரிசனம் முடிந்த பலர் அடிவாரத்திற்கு வந்து சொந்த ஊருக்கு திரும்பினர். இந்த நிலையில், திடீரென சதுரகிரி மலையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோயிலுக்கு வந்த 200 பக்தர்கள் இரவு கோயிலிலேயே தங்க வைக்கப்பட்டனர். நேற்றிரவும் கோயில் மலைப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்ததால் ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இன்று ஆனி அமாவாசை என்பதால் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு வந்தனர். அவர்களை மகாராஜபுரம் விலக்கு உள்ளிட்ட செக்போஸ்டுகளில் போலீசார் தடுத்து நிறுத்தினர். கோயிலுக்கு செல்ல தடை இருப்பதால் போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனி அமாவாசையையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கயிறு கட்டி மீட்பு

இன்று காலை மழை இல்லாததால் கோயிலில் நேற்றிரவு தங்க வைக்கப்பட்ட பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்பட்டனர். சங்கிலி பாறை, எலும்பு ஓடை, மாங்கேணி ஓடை உள்ளிட்ட இடங்களில் கயிறு கட்டி பக்தர்கள் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர்.


Tags : Chessagiri , Heavy rain in the hills: Permission to go to Sathuragiri temple denied ..! Devotees are disappointed
× RELATED சதுரகிரி கோவிலுக்குச் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு தடை