×

சமூக வலைத்தளங்களை பராமரிக்க ரூ.2.31 கோடியா?: சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க விடப்பட்ட டெண்டர் ரத்து..!!

சென்னை: சென்னை மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களை பராமரிக்க வழங்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அதிக தொகைக்கு டெண்டர் விடப்பட்டதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.  இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க ஓராண்டுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களை பராமரிக்க ரூ.2.31 கோடியா?

சென்னை மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.2.31 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் Ks Solution என்ற தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. மாநகராட்சி சமூக வலைத்தளங்களில் சொற்ப பதிவுகளே பதிவு செய்யப்படும் நிலையில் ரூ.2.31 கோடி ஒதுக்கியதால் குறைகேடு நடைபெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்தது. எஸ்.பி. வேலுமணியின் கீழ் இயங்கிய சென்னை மாநகராட்சியில் முறைகேடு புகார் எழுந்ததால் டெண்டரை ரத்து செய்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

குறைந்த செலவில் மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களை பராமரிக்க மாற்று நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதுபோன்று கடந்த காலங்களில் வழங்கப்பட்ட முறைகேடான பல டெண்டர்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று பொதுவான அமைப்புகளும், இயக்கங்களும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களை பராமரிப்பது, மாநகராட்சியின் பணிகள், மக்களுக்கான பொது தகவல்கள், சிறப்பு திட்டங்கள் போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பதிவிடுவது. மக்களுக்கான விழிப்புணர்வு வீடியோக்களை தயார் செய்வது. மாநகராட்சியின் நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்துதல். சென்னையின் சிறப்பம்சங்களை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தல் போன்றவற்றிற்காக இந்த சமூக வலைதள பக்கங்கள் டெண்டர் விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Codia ,Twitter ,Facebook ,Instagram ,Chennai , Chennai Corporation, Social Website Page, Tender
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு