தா.பழூர் அருகே நெல் சாகுபடியில் நவரைப்பட்டம் அறுவடை பணி துவக்கம்

தா.பழூர் : அரியலூர் மாவட்டம், தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் கோடாலி கருப்பூர், அண்ணகாரன்பேட்டை, இடங்கண்ணி, தென்கச்சி பெருமாள் நத்தம், காரைக்குறிச்சி, அருள்மொழி, ஸ்ரீபுரந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நவரை பட்டம் சாகுபடி செய்துள்ளனர். தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் மோட்டார் பாசனம் மூலம் விவசாயிகள் நவரை பட்டம் நெல் நடவு சாகுபடி செய்திருந்தனர்.

நவரை பட்டம் நெல் நடவு செய்ய விவசாயிகள் அதிகமாக 120 நாளில் அறுவடை செய்யக்கூடிய நெல் ரகமான கோ 51, கோ 46 ஆகிய நெல் ரகங்கள் தேர்வு செய்து நடவு செய்துள்ளனர்.

தற்போது நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் நவரை பட்டம் அறுவடையை துவக்கி உள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயி முத்துசெல்வன் கூறுகையில், 1 ஏக்கருக்கு விதை நெல், நடவு கூலி, களை எடுத்தல், மருந்து, உரம் அறுவடை என ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும், இதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்.

மேலும் உரிய விலைக்கு நெல் விலை போகவில்லை. விவசாயம் செய்யாமல் மண் மலடாகிவிடும் என்பதால் நிலத்தை கிடப்பில் போட மனம் இன்றி விவசாயம் செய்துள்ளதாகவும், நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் இடைத்தரகரிடம் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பில் 42 கிலோ மூட்டை ரூ.750க்கு கொள்முதல் செய்கின்றனர். ஆனால், அரசு கொள்முதல் நிலையம் இல்லாததால் இடைத்தரகர்கள் 72 கிலோ மூட்டை ரூ.1050க்கு கொள்முதல் செய்வதாகவும் கூறுகின்றனர்.

இப்பகுதியில் குறைந்தது 3 கொள்முதல் நிலையங்களை அரசு தாமதம் இன்றி திறக்க வேண்டும். சென்ற ஆண்டு மிகவும் தாமதமாக திறந்தால் பல ஆயிரம் ஏக்கரில் விளைந்த நெல் மூட்டைகள் முளைத்து வளர்ந்து விட்டன. விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கும் நெல் விணாவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்ற ஆண்டு சம்பா அறுவடை நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நிலையில் தற்போது அறுவடை செய்யும் நெல் மூட்டைகள் ஒருபுறம் காத்து கிடக்கின்றன. மேலும் அடுத்த சம்பா நடவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: