×

ஊரடங்கில் தளர்வால் 79 நாட்களுக்குப் பிறகு ஆழியார் பூங்கா திறப்பு

ஆனைமலை : கோவை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்திய தொடர்ந்து, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஆழியார் அணை, குரங்கு அருவி உள்ளிட்ட பகுதிகள் கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஆழியார் அணை பூங்கா மற்றும் குரங்கு அருவிக்கு வந்து செல்வது வழக்கம்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் ஆழியார் அணை பூங்கா மற்றும் குரங்கு அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.தற்போது நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில்,  கோவை மாவட்டத்திலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தலங்களான ஆழியார் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. முதற்கட்டமாக பொதுப்பணித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் ஆழியார் பூங்கா பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைதொடர்ந்து 79 நாட்களுக்கு பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஆழியார் பூங்கா திறக்கப்பட்டது.

பூங்கா திறக்கப்பட்ட போதிலும் நோய் பரவல் அச்சம் காரணமாக தற்போது பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. சுற்றுலாப்பயணிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும், என்றும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றி நோய் தொற்று பரவாமல் இருக்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு தளர்வு அறிவித்த போதிலும், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குரங்கு அருவி இன்னும் திறக்கப்படவில்லை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய புலிகள் ஆணையம் உத்தரவுக்கு பிறகு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு,விரைவில் ஆழியார் குரங்கு அருவி திறக்கப்படும் என்ற வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Azhiyar Park , Anaimalai: Following the curfew in Coimbatore district, the Azhiyar Dam Park near Pollachi has been reopened for tourism.
× RELATED ஆழியார் பூங்கா மீண்டும் திறப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி