சந்தேக ‘பெனால்டி’யால் முதல்முறையாக யூரோ பைனலில் இங்கிலாந்து

லண்டன்: பெனால்டி மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய இங்கிலாந்து அணி முதல் முறையாக யூரோ கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடரின் 2வது அரையிறுதி ஆட்டம் நேற்று லண்டனில் நடந்தது. அதில் முன்னாள் சாம்பியன் டென்மார்க்-இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் கூடுதல் வேகம் காட்ட, அதற்கு சவால் விடும் வகையில் டென்மார்க்கும் விளையாடியது. அரங்கில் நிரம்பி வழிந்த இருதரப்பு ரசிகர்களும்  வீரர்களை உற்சாகப்படுத்த ஆட்டத்தில் அனல் பறந்தது. அடிக்கடி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது இங்கிலாந்துதான்.  ஆனால் முதல் கோலை அடித்து அசத்தியது டென்மார்க். அந்த அணியின் மிக்கேல் டம்ஸ்கார்ட் ஆட்டத்தின் 30நிமிடத்தில்  தனக்கு கிடைத்த ‘ப்ரீ கிக்’ வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்தார். இந்த தொடரில் ‘ப்ரீகிக்’ மூலம் விழுந்த முதல் கோல் இதுதான்.

அதனால்  இங்கிலாந்து ரசிகர்கள் சோகமானார்கள். அந்த சோகத்தை  போக்கும் வேலையையும் டென்மார்க் செய்தது. ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் கோல் விழுவதை தடுக்க முயன்ற டென்மார்க் கேப்டன் சைமன் கியர் மீது பட்ட பந்து, கோல் வலைக்குள் புகுந்தது. அந்த சுயகோல் காரணமாக இங்கிலாந்து 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது. ஆனாலும் 2வது பாதியில் யாரும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் விளையாடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் முதல் பாதி ஆட்டம் முடிய இருந்த நிலையில் டென்மார்க் கோல் பகுதியில் அந்த அணியின் வீரர்கள் ஜோகிம் மஹேல், மத்தியாஸ் ஜென்சன், இங்கிலாந்து வீரர் ரகீம் ஸ்டெர்லிங் இடையே பந்தை கைப்பற்றுவதில்  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் ஸ்டெர்லிங் கீழே விழுந்தார்.

மத்தியாஸ் காலை இடறி விட்டதால் ஸ்டெர்லிங் விழுந்தாக இங்கிலாந்து முறையிட அந்த அணிக்கு நடுவர் பெனால்டி வாய்ப்பு அளித்தார். அந்த வாய்ப்பு மூலம் கேப்டன் ஹாரி கேன்  கோல் அடிக்க முயன்றார். அதனை டென்மார்க் கோல்கீப்பர் கஸ்பர் ஸ்மைக்கேல் தடுத்தார். திரும்ப வந்த பந்தை ஹாரி மறுபடியும் உதைக்க அது கோலுக்குள் புகுந்தது. அதனால் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. கூடுதல் ஆட்டத்தின் 2வது பாதியில்  டென்மார்க்  வீரர் மத்தியாஸ் ஜென்சன் காயம் காரணமாக வெளியேறினார். பதிலி வீரர்கள்  எல்லாம் களத்தில் இருந்ததால் வேறு வீரரை களம் இறக்க முடியவில்லை. அதனால் டென்மார்க் 10 பேருடன் விளையாடியது. ஆனாலும்  யாரும் கோலடிக்கவில்லை. எனவே இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் பெற்றிப் பெற்று  63 ஆண்டுகால யூரோ வரலாற்றில் முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

* விடியவிடிய கொண்டாட்டம்

இங்கிலாந்து அணி 1966ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியதற்கு பிறகு எந்த பெரிய போட்டியிலும் இறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றதில்லை. இப்போது 55 ஆண்டுகளுக்கு பிறகு 2வது முறையாகவும், யூரோ தொடரில் முதல்முறையாகவும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதை இங்கிலாந்து ரசிகர்கள் விடியவிடிய கொண்டாடினர்.

* சரியா? தவறா?

இங்கிலாந்துக்கு வழங்கப்பட்ட பெனால்டி சர்ச்சையாகி உள்ளது. சந்தேகத்திற்குரிய அந்த பெனால்டி குறித்து விவாதம் எழுந்துள்ளது. இங்கிலாந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், ‘நான் அவர்களின் கோல் பகுதியில் இருந்த போது, டென்மார்க் வீரர் காலால் தட்டி விட்டதால் விழுந்து விட்டேன். அதனால் பெனால்டி கொடுக்கப்பட்டது சரியானதுதான்’ என்று கூறினார். அதே நேரத்தில் டென்மார்க் பயிற்சியாளர் கஸ்பர் ஹுல்மண்ட். ‘ ஸ்டெர்லிங் தானே கால் இடறி விழுந்து விட்டார். அவரை யாரும் தள்ளி விடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே அதற்கு பெனால்டி கொடுத்தது தவறானது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>