×

வெளியேறினார் பெடரர் அரையிறுதியில் புதுமுகங்கள்

விம்பிள்டன் ஓபனில் 8 முறை சாம்பியனாகி, அதிக முறை கோப்பையை கைப்பற்றிய சாதனைக்கு சொந்தக்காரர் சுவிட்சர்லாந்து வீரர் ரேஜார் பெடரர்(39வயது, 8வது ரேங்க்). இந்த முறை காலிறுதியில் போலாந்து வீரர் ஹுபெர்ட் ஹர்கஸ்(24வயது, 18வது ரேங்க்) இடம் 3-6, 6-7, 0-6 என நேர் செட்களில் தோல்வி அடைந்தார். கடந்த முறை இறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச்சிடம் போராடி தோற்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களுக்கு நேற்று ஒய்வு நாள். இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில்  நோவக் ஜோகோவிச்(செர்பியா,34வயது, 1வது ரேங்க்) - டெனிஸ் ஷாபோவலோவ்(ரஷ்யா, 22வயது, 12வது ரேங்க்) ஆகியோர் மோதுகின்றனர். தொடர்ந்து 2வது அரையிறுதியில் மாட்டீயோ பெர்ரேட்டினி (இத்தாலி, 25வயது, 9வது ரேங்க்)-ஹுபெர்ட் ஹர்கஸ்(போலாந்து, 24வயது, 18வது ரேங்க்) ஆகியோர் விளையடுகின்றனர். இவர்களில் ஜோகோவிச் தவிர மற்ற 3பேரும்  கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறியவர்கள். இப்போது அரையிறுதியிலும் முதல்முறையாக விளையாட உள்ளனர்.

*அதிகம் புதுமுகம்
இங்கிலாந்து அணியில் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி அறிவிக்கப்பட்டது. அதனால் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து தரப்பில் 5, பாகிஸ்தான் தரப்பில் ஒன்று என ஒரே ஆட்டத்தில் 6பேர்  புதிதாக அறிமுகமாயினர்.

* மகமதுல்லா 150*
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் வங்கதேசம் 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சில் 468ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் மகமதுல்லா 150*ரன்னுடன் களத்தில் இருந்தார். ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்சிங் 4 விக்கெட் அள்ளினார். அதனையடுத்து ஜிம்பாப்வே முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.

* ஜப்பானில் அவசரநிலை
ஜப்பானில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், ஒலிம்பிக் போட்டி நடத்துவதை அந்நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். தள்ளி வைக்கப்பட்ட ஒலிம்பிக்கை நடத்தியே தீருவது என உறுதியில் ஜப்பான் அரசும், சர்வதேச ஒலிம்பிக்  கமிட்டியும் (ஐஓசி) இருக்கின்றன. அதற்கு வசதியாக வரும் ஜூலை 12  முதல் ஆக.22ம் தேதி வரை அவசரநிலை அமல்படுத்தப்பட உள்ளது. ஒலிம்பிக் போட்டி ஜூலை 23முதல் ஆக.8ம் தேதி வரை நடக்கிறது.  இந்நிலையில்   ஐஓசி தலைவர் தாமஸ் பாக்   நேற்று ஜப்பான் சென்றார். விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த தாமஸ் நேரடியாக ஒலிம்பிக் தலைமையகத்திற்கு சென்று விட்டார். அங்கு 3 நாட்கள் குவரான்டைனில்  இருப்பார்.

* புது கிராண்ட் மாஸ்டர்
செர்பியன் ஓபன்  செஸ் தொடரில் தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்றதின் மூலம்  இந்தியாவின் ஆதித்யா மித்தல்(14வயது) நேற்று முதல்முறையாக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை  வென்றுள்ளார்.

Tags : Federer , Federer outscored newcomers in the semifinals
× RELATED மெட்வதேவுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை: பெடரர், நடாலை முந்த வாய்ப்பு