×

ராமாபுரம் கலசத்தம்மன் கோயில் கட்டிடம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதா?...அறநிலையத்துறை அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ராமாபுரம் கலசத்தம்மன் கோயில் கட்டிடம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராமாபுரத்தில் கலசத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் மண்டபம் சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரி அறப்போர் இயக்கம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அடங்கிய அமர்வு, மனுதாரர் குறிப்பிடும் கோயில் கட்டிடம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதா, அந்த சாலை முதலில் எப்படி இருந்தது, தற்போது எப்படி உள்ளது, என சென்னை மாநகராட்சி ஆணையர், மதுரவாயல் தாசில்தார், மனுதாரர் உள்ளிட்ட கூட்டுக்குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டனர்.  இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முத்துக்குமார், சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளது.

இதை அகற்றுவதால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே, உத்தரவிட்டதன்படி ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. எனவே, சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும். இதுபற்றி ஆய்வு செய்த அறிக்கையை 12 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : Ramapuram Kalasathamman temple ,Charity Department , Ramapuram Kalasathamman Temple Building Occupancy, Charitable Trusts, high court
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...