×

நேற்றைய தினமும் அதிகரிப்பு 18 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.102ஐ தாண்டியது: ஒரு வாரத்தில் ரூ.1.56 உயர்ந்தது

சேலம்: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.1.56 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் ஏற்பட்ட விலையேற்றத்தால், தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ரூ.102ஐயும், 2 மாவட்டங்களில் ரூ.103ஐயும் கடந்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இம் மாதத்தில் நேற்றைய தினம் 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினர். இதன்மூலம் இந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல் ரூ.1.56ம், டீசல் 42 காசும் உயர்ந்துள்ளது. நேற்று பெட்ரோல் 31 காசும், டீசல் 8 முதல் 10 காசும் அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.06க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 31 காசு உயர்ந்து ரூ.101.37 ஆக விற்கப்பட்டது. டீசல் விலை ரூ.94.06ல் இருந்து 9 காசு உயர்ந்து ரூ.94.15 ஆக அதிகரித்தது.

இதுவே சேலம் மாவட்ட பகுதியில் பெட்ரோல் விலை ரூ.101.48ல் இருந்து 31 காசு அதிகரித்து ரூ.101.79 ஆகவும், டீசல் விலை ரூ.94.51ல் இருந்து 8 காசு உயர்ந்து ரூ.94.59 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில், மிக அதிகபட்சமாக நீலகிரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.04 ஆகவும், கடலூரில் ரூ.103.01 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுபோக கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.102ஐ தாண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் தொடர் விலையேற்றத்தால், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

Tags : Petrol price crosses Rs 102 in 18 districts: Rs 1.56 a week
× RELATED தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி...