×

இலங்கை அமைச்சரவையில் ராஜபக்சே குடும்பம் ஆதிக்கம்: கடைசி தம்பியும் நிதியமைச்சராக பதவியேற்பு

கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த 4வது நபராக பசில் ராஜபக்சே இந்நாட்டின் நிதியமைச்சராக நேற்று பதவியேற்று கொண்டார். இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களில் கோத்தபய ராஜபக்சே ஜனாதிபதியாகவும், மகிந்த ராஜபக்சே பிரதமராகவும், விவசாயத் துறை அமைச்சராக சமல் ராஜபக்சேவும் பதவியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், ராஜபக்சே சகோதரர்களில் கடைசி தம்பியான பசில் ராஜபக்சே நேற்று நிதியமைச்சராக பதவியேற்றார். பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் இருந்த நிதித்துறை அவருக்கு அளிக்கப்பட்டது. பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்ட அமல்படுத்துதல் துறை என்று புதிதாக அறிவிக்கப்பட்ட அமைச்சகத்தின், அமைச்சராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலின் போது, இலங்கை மக்கள் முன்னணி கட்சியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட, தேசிய அளவிலான பட்டியலில் பசில் பெயர் இடம் பெறவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே அமைச்சராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது பசில் பதவி ஏற்பதற்காக, எம்பி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக பசில் எம்பி.யாக தேர்ந்தெடுக்கப்படுவார். இலங்கை, அமெரிக்கா என இரட்டை குடியுரிமை பெற்றிருப்பதால், தேர்தலில் போட்டியிடும் தகுதி இழந்த பசில் ராஜபக்சேவை தேசியப் பட்டியலில் சேர்த்து நிதி அமைச்சராக்கி இருப்பது நாட்டின் இறையாண்மைக்கும் அரசியலமைப்புக்கும் எதிரானது என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

* ஒரே குடும்பத்தில் 6 அமைச்சர்கள்
இலங்கையில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் விளையாட்டுத் துறை அமைச்சராகவும், சமல் ராஜபக்சேவின் மகன் சசீந்தர இணை அமைச்சராகவும், சகோதரி மகன் நிபுண ரனவக்க அரசு ஆலோசகராகவும் உயர் பதவிகளில் உள்ளனர். நிதி அமைச்சர் பசிலை சேர்த்து ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அரசு உயர் பதவிகளில் இருக்கின்றனர். இவர்களில் 6 பேர் அமைச்சர்கள்.

Tags : Rajapaksa , Rajapaksa family dominates Sri Lankan cabinet: Last brother takes over as finance minister
× RELATED அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாக பணம்...