×

எல்.முருகன் ஒன்றிய இணை அமைச்சரான நிலையில் தமிழக பாஜ தலைவரானார் அண்ணாமலை: ஓரங்கட்டப்பட்ட மூத்த தலைவர்கள் அதிருப்தி

சென்னை: தமிழக பாஜ தலைவராக இருந்த முருகன், ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதால், புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாம் முறை பிரதமராக பதவியேற்றார் மோடி. அதிலிருந்து அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. பல அமைச்சர்கள் மரணம், பலர் ராஜினாமா செய்ததால், பல பதவிகள் காலியாக இருந்தன. அரசியலமைப்பு சட்டத்தின்படி மொத்தமாக 81 பேர் ஒன்றிய அமைச்சராகலாம். ஆனால் மோடி அமைச்சரவையில் 53 பேர் மட்டுமே இருந்தனர். இந்நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சர்கள் பட்டியல் நேற்று முன்தினம் மதியம் வெளியானது. அந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து தமிழக பாஜ தலைவராக பதவி வகித்து வரும் எல்.முருகன் இடம் பிடித்தார். ஒன்றிய இணை அமைச்சராக உடனடியாக பொறுப்பேற்றும் கொண்டார். நேற்று அலுவலகத்தில் தனது பணியையும் எல்.முருகன் தொடங்கினார்.

 பாஜ விதிகளின்படி அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவர் தலைவர் பதவியில் இருக்க முடியாது. இதையடுத்து எல்.முருகன் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தலைவர் ராஜினாமா செய்ததை அடுத்து தமிழக பாஜவுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் தமிழக பாஜ தலைவர் பதவியை பிடிப்பதில் பாஜ மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவியது. மீண்டும் தலைவர் பதவியை குறி வைத்து பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மற்றும் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, கே.டி.ராகவன், புரட்சி கவிதாசன், கோவை முருகானந்தம், நாராயணன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் இடையே கடும் போட்டியிருந்தது. பலர் டெல்லியில் முகாமிட்டு தலைவர் பதவியை பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். சிலர் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மூலமும் பதவியை பிடிக்க தீவிரமாக முயன்று வந்தனர்.

 இந்த நிலையில் தமிழக பாஜ தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கே.அண்ணாமலையை நியமித்து பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தவிட்டார். இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை நேற்றிரவு தேசிய பொதுசெயலாளர் அருண் சிங் வெளியிட்டார். புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதையடுத்து பாஜ மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அண்மையில் கட்சியில் இணைந்த ஒருவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கட்சியை வளர்க்க காலம் காலமாக பணியாற்றி வருகிறோம். இப்படி புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு பதவி வழங்குவதா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கர்நாடகாவில் எஸ்பியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, அதை ராஜினாமா செய்து விட்டு வந்தார். அவருக்கு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு, தோல்வியடைந்தார். தற்போது அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 தமிழக பாஜ தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் 2019 செப்டம்பர் 1ம் தேதி  தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு தமிழக பாஜவுக்கு  தலைவர் நியமிக்கப்படவில்லை. சுமார் 7 மாதங்கள் வரை மாநில தலைவர் பதவி காலியாக  இருந்தது. இதையடுத்து தமிழக பாஜ தலைவர் பதவியில், தேசிய பட்டியலின  ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் நியமிக்கப்பட்டார். சுமார்  இரண்டு ஆண்டுகள் வரை அந்த பதவியில் இருந்தார். தற்போது, அண்ணாமலை பாஜ மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமாலை கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். எம்பிஏ படித்துள்ளார். 2011ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். இவர் 2013 முதல் 2014 வரை கர்நாடகா சப் டிவிசன் ஏஎஸ்பியாக பணியாற்றினார். எஸ்பியாக 2016ம் ஆண்டு முதல் 2018 அக்டோர் 16ம் தேதி வரை பணியாற்றினார்.

மேலும் போலீஸ் துணை கமிஷனராகவும் பணியாற்றினார். ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப்படும் அளவுக்கு பிரபலமானார். அவர் தனது ஐபிஎஸ் பணியை 2019ம் ஆண்டு ராஜினாமா செய்தார். பின்னர் அவர் தனது சொந்த மாநிலமான தமிழகம் திரும்பினார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட அவர் இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் 2020 ஆகஸ்ட் மாதம் டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து பாஜவில் இணைந்தார். உடனடியாக அவருக்கு பாஜ மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஏப்ரலில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜ வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர். அவரின் அதிரடி பேட்டி, பல்வேறு பேச்சு சர்ச்சையை கிளப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

* தமிழக பாஜ தலைவராக தமிழிசை 2019ம் ஆண்டு வரை இருந்தார்.
* எம்பியாக இல்லாத முருகன், மத்திய இணையமைச்சராக பதவியேற்றார்.
* ஒருவருக்கு ஒரு பதவி அடிப்படையில் தமிழக பாஜ தலைவர் பதவியை முருகன் ராஜினாமா ெசய்தார்.
* கர்நாடக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை திடீரென தமிழக பாஜ தலைவராக அறிவிக்கப்பட்டார்.

Tags : L. Murugan ,Tamil Baja ,Annalai , L. Murugan, Union Minister, Tamil Nadu BJP leader, Annamalai
× RELATED ஊட்டியில் ஒரே நேரத்தில்...