×

பாஜகவுக்கு ராஜ்யசபா பதவியா என்.ஆர். காங்கிரசார் கொந்தளிப்பு: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி  சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் வெற்றிபெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராகவும், அவரது கட்சியை சேர்ந்த  லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா ஆகிய 3 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அதேபோல், பாஜகவை சேர்ந்த செல்வம் சபாநாயகராகவும், நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் ஆகிய 2 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அமைச்சர்கள் பதவியேற்றாலும் இதுவரை அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.

தங்களது அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை அளிக்க பாஜக வற்புறுத்தி வருகிறது. இதனால் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்  இடம்பெற்று, நேற்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவர், எம்பியாக இல்லாததால், 6 மாதத்திற்குள் எம்பி ஆக வேண்டும். புதுச்சேரி ராஜ்யசபா எம்பி பதவி அக்டோபர் மாதம் காலியாவதால், அங்கிருந்து அவரை தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இது  சம்பந்தமாக முதல்வர் ரங்கசாமியுடன் பாஜ மேலிட தலைவர்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சபாநாயகர் பதவியை  என்.ஆர். காங்கிரசிடமிருந்து பாஜக பறித்துவிட்டது. தற்போது தமிழகத்தைச் சேர்ந்தவரை ராஜ்யசபா எம்பியாக்க பாஜக போட்டுள்ள திட்டம் என்.ஆர். காங்கிரசாரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன.

* பெரும்பான்மை ஆதரவு யாருக்கு?
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசுக்கு 10, பாஜகவுக்கு 6, சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு 3 உள்ளது. எதிர்க்கட்சிகள் வரிசையில் திமுக 6, காங்கிரஸ் 2 பேர் உள்ளனர். இதுதவிர 3 சுயேட்சைகள் நடுநிலை வகிக்கின்றனர். மேலும் 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களுக்கு ராஜ்யசபா  எம்பி தேர்தல் வாக்குரிமை அளிக்கப்படாது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக கிடைக்கிறதோ அவரே தேர்தலின்றி வெற்றிபெற முடியும். இல்லாவிடில் வாக்குப்பதிவு நடத்தி ராஜ்யசபா எம்பியை  தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகும்.

Tags : Rajyasapha ,Bhājagavagawa ,Novatcheri , Rajya Sabha post for BJP Congress turmoil: Pondicherry politics turmoil
× RELATED எதிரிகளை கொலை செய்ய திட்டம்!:...