ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பி.டி.ஓ. இருக்கையில் அமர்ந்து ஒருமையில் பேசிய பாமக எம்எல்ஏ

திண்டிவனம்:  ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை கணக்கு எடுப்பதற்காக பணித்தலை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கணக்கு எடுக்கக்கூடாது என பாமக மற்றும் அதிமுகவினர் மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சீத்தாலட்சுமி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் சிவக்குமார் எம்எல்ஏவிடம் பேச்சுவார்த்தை  நடத்த பிடிஓ அறைக்கு அழைத்து சென்றார்.

அப்போது எம்எல்ஏ சிவக்குமார், பிடிஓ இருக்கையில் அமர்ந்து பணித்தலை பொறுப்பாளர்களை கணக்கு எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வரை, அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி செயலர்கள் கணக்கு எடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும், இல்லையெனில் பாமக மற்றும் அதிமுகவினருக்கு பணித்தலை பொறுப்பாளர்கள் பணி வழங்க வேண்டும் என கூறி ஒருமையில் பேசியுள்ளார். அப்போது பிடிஓ சீத்தாலட்சுமி இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: