அதிமுக ஆட்சி இழந்ததற்கு பாஜக, பாமக கூட்டணி காரணம்: சி.வி.சண்முகம் மீண்டும் குற்றச்சாட்டு

திண்டிவனம்: ‘அதிமுக ஆட்சியை இழந்ததற்கு பாஜக, பாமகவுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம்’ என்று சி.வி.சண்முகம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவம்மாபேட்டையில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைய நாம் எடுத்த சில முடிவுகள் காரணம். அதற்கு கூட்டணியை குறிப்பாக சொல்ல வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு நாம் ஆட்சிக்கட்டிலில் இருந்திருப்போம். வெற்றிகரமாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று இருக்கலாம். தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பாரதிய ஜனதா கட்சியினருடன் கூட்டணி. இதனால் முழுமையாக சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை.

சிறுபான்மையினருக்கு நம் கட்சியின் மீதும் எந்த கோபமோ, வருத்தமோ இல்லை. அவர்கள் கொள்கை ரீதியாக பாஜகவுடன் முரண்பட்டு இருந்தார்கள். நாம் அவர்களோடு வைத்த கூட்டணி காரணத்தால் மிகப் பெரிய தோல்வியை சந்திக்க நேரிட்டது. உதாரணம் நான் போட்டியிட்ட விழுப்புரம் தொகுதி, நான் விழுப்புரத்தில் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறேன். விழுப்புரத்தில் சிறுபான்மையினரின் வாக்குகள் 20,000 இருக்கிறது. இந்த 20 ஆயிரம் வாக்குகளில் 18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகரத்திலேயே உள்ளது. அந்த விழுப்புரம் நகரத்தில் எனக்கு குறைந்தது 16 ஆயிரம் வாக்குகள். சிறுபான்மையினர் வாக்குகள் எனக்கு 300 வாக்குகள் கூட கிடைக்கவில்லை. இந்த நிலைதான் தமிழகம் முழுவதும் இருந்தது.  பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டணி வைத்த காரணத்தால் நாம் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளை பெற முடியவில்லை.

அது அவர்களின் கொள்கை ரீதியான ஒரு முரண்பாடு. நாம் தோல்வி அடைய பாஜக, பாமகவுடன் கூட்டணி சேர்ந்ததுதான் காரணம்.இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார். நேற்று முன்தினம் பாஜகவை குற்றம்சாற்றி சி.வி.சண்முகம் பேசியதற்கு பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், ‘சி.வி.சண்முகம் பேச்சு, அவரது சொந்த கருத்து. அதிமுக-பாஜ கூட்டணி தொடரும் என்று கூட்டறிக்கை வெளியிட்டனர். இந்த சூழலில், தோல்விக்கு பாஜக-பா.ம.கவுடன் கூட்டணிதான் காரணம் என அவர் பேசியிருப்பது கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: