×

திருவனந்தபுரம் இஸ்ரோ ரகசியம் கடத்தல் வழக்கு குற்றம்சாட்டப்பட்ட யாருக்கும் முன்ஜாமீன் வழங்கக் கூடாது: நீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல்

திருவனந்தபுரம்: இந்திய  விண்வெளி ஆய்வு மைய ரகசியம் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு  முன்ஜாமீன் வழங்கக்கூடாது என நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மைய ரகசியத்தை வெளிநாட்டுக்கு கடத்தியதாக கூறப்பட்ட புகாரில் திருவனந்தபுரத்தை சேர்ந்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். கேரள போலீசார் விசாரித்த இந்த வழக்கு பின்னர்  சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் நம்பிநாராயணனுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தன்னை சிக்க வைத்ததில் சதி நடந்துள்ளது என்றும், இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறி உச்ச நீதிமன்றத்தில் நம்பிநாராயணன் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. கேரள டிஜிபி.யாக இருந்த சிபிமேத்யூ மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் உள்பட 18 பேர் மீது, கீழ் நீதிமன்றத்தில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. இவர்கள் நம்பி நாராயணனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தொடர்பாக விளக்கமளிக்க கோரி சிபிஐக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து சிபிஐ ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், ‘நம்பிநாராயணனுக்கு எதிராக சில வெளிநாடுகள் சேர்ந்து சதி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இது குறித்து விசாரிக்க வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல்தான் நம்பி நாராயணனை கைது செய்துள்ளனர். இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் உயர் பதவியில் இருந்தவர்கள். அவர்களை ஜாமீனில் விட்டால் சாட்சிகளை கலைக்க  வாய்ப்பு உண்டு. எனவே, யாருக்கும் ஜாமீன் வழங்க கூடாது,’ என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார்.

Tags : Thiruvananthapuram ,ISRO ,CBI , Trivandrum: ISRO secret abduction case: No bail for anyone accused: CBI
× RELATED மோடியின் வருகையை முன்னிட்டு...