×

பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது: மாநகரை தூய்மையாக பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்க சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் சுவரொட்டிகள்  ஒட்டுவதை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி அவர்கள் தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரமாக விளங்கும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை இந்திய தேசத்தின் நான்கு பெருநகரங்களில் ஒன்றாகும். சென்னை மாநகரை சுற்றி பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்துள்ள ஸ்ரீரீபெரும்புதூர், மறைமலைநகர் மற்றும் கும்மிடிபூண்டி போன்ற தொழில் நகரங்களும், வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தளமான மகாபலிபுரமும் அமைந்துள்ளது.  

மேலும், ஆசியாவின் மிக நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரையும் சென்னையில் அமைந்துள்ளது. வர்த்தக தொழில் ரீதியாகவும், நிர்வாக அலுவல்கள் ரீதியாகவும் சர்வதேச அளவில் முக்கிய நகரமாக விளங்கும் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிப்பது மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாநகரின் அழகினை சீர்குலைக்கும் வகையில் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள் குறிப்பாக அரசு சுவர்கள், பாலங்கள், தூண்கள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை மாநகராட்சி தூய்மை  பணியாளர்கள் அகற்றி  வருகின்றனர். மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள   பேருந்து நிறுத்த நிழற்குடைகள், தெருக்களின் பெயர் பொறித்த பலகைகள் மற்றும் அரசு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்பணிகள் மாநகராட்சி பொறியியல் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சியின் சார்பில் பேருந்து சாலைகளில் உள்ள தடுப்புகள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றும் வகையில் சிறப்பு நடவடிக்கையாக நாள்தோறும் ஒவ்வொரு மண்டலத்திலும் பேருந்து செல்லும் 5 சாலைகள் தெரிவுசெய்யப்பட்டு, அங்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் முழுவீச்சில் அகற்றப்பட உள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால், அதுகுறித்த தகவல்களை மாநகராட்சியின் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாராக தெரிவிக்கலாம். பொதுமக்கள் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கி சென்னை மாநகரை சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கும் வகையில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்க வேண்டும் அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags : Commissioner ,Municipal of Chennai , Posters should not be pasted in public places: Chennai Corporation Commissioner instructs to provide clean public cooperation
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...