×

ஹைதி அதிபர் படுகொலைக்கு உலக நாடுகள் கண்டனம்..கொலையாளிகள் 4 பேரை சுட்டுக் கொன்றது ஹைதி காவல்படை

போர்ட்டோ பிரின்ஸ்:  ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினெல் மொய்சி படுகொலை செய்யப்பட்டதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதிபரை படுகொலை செய்த 4 பேரை அந்நாட்டு காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது.கரீபியன் நாடான ஹைதியில் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவி வருகின்றது. மேலும், இங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.  அதிபர் ஜோவினெல் மொய்சி தனியார் குடியிருப்பில் தங்கி இருந்தார். இந்நிலையில், அடையாளம் தெரியாத கும்பலால் நேற்று முன்தினம் இரவு அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அதிபரின் மனைவி மார்டின், உயிருக்கு ஆபத்தான நிலைமையில் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ளார்.அதிபரை கொன்ற கொலைகாரர்கள் காவல் அதிகாரிகள் 4 பேரை பிணைய கைதியாக சிறை பிடித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினெல் மொய்சி படுகொலைக்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.படுகொலையை அரங்கேற்றிய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதனிடையே ஹைதி அதிபர் ஜோவினெல் மொய்சியை படுகொலை செய்த 4 பேரை ஹைதி காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக பிரதமர் ஜோசப் தெரிவித்துள்ளார். அவர்களது மறைவிடத்தை அறிந்து அதிரடியாக புகுந்த காவல்துறையினர் கொலையாளிகள் 4 பேரை சுட்டுக் கொன்று விட்டு பிணைய கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட 4 காவல் அதிகாரிகளையும் மீட்டுள்ளனர்.படுகொலை தொடர்பாக இது வரை கைது செய்துள்ள ஹைதி காவல்படையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 53 வயதான ஜோவினெல் மொய்சி 2017ம் ஆண்டு முதல் ஹைதி அதிபராக பதவி வகித்து வந்தார்.அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில், அதிபருக்கு எதிராக அந்நாட்டில் போராட்டங்களும் நடைபெற்று வந்தன.ஜோவினெல் மொய்சியின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரியுடன் முடிவடைந்ததை அடுத்து, இன்னும் ஓராண்டு பதவியில் நீடிக்கப் போவதாக ஜோவினெல் மொய்சி சமீபத்தில் அறிவித்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், மர்ம நபர்கள் வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

Tags : president , ஹைதி
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...