சுவேந்து அதிகாரியின் ஆதிக்கத்தால் பாஜக இளைஞரணி தலைவர் விலகல்: மேற்குவங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், பாஜக இளைஞரணி பதவியை எம்பி சவுமித்ரா கான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேற்குவங்க பாஜக இளைஞரணி தலைவரும், எம்பியுமான சவுமித்ரா கான், கடந்த 2018ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரசில் இருந்து வந்த சுவேந்து அதிகாரியின் ஆதிக்கம், பாஜகவில் அதிகரிப்பதை எதிர்த்து சவுமித்ரா கான் தனது இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில், ‘தனிப்பட்ட காரணங்களுக்காக நான் என்பதவியை ராஜினாமா செய்கிறேன். ஆனால், தொடர்ந்து பாஜகவில் நீடிப்பேன்.

ஒரு தலைவர் (சுவேந்து அதிகாரி) அடிக்கடி டெல்லி சென்று, பாஜகவின் ஒவ்வொரு வெற்றிக்கும் சொந்தம் கொண்டாடி வருகிறார். டெல்லி தலைவர்களை அவர் தவறாக வழிநடத்தி வருகிறார்’ என்று கூறியுள்ளார்.  இதுகுறித்து சுவேந்து அதிகாரியிடம் கேட்டபோது, ‘அவரது பேச்சை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் என் இளைய சகோதரர் போன்றவர்’ என்றார். ஏற்கனவே, மேற்குவங்க பாஜகவில் பேரவை தேர்தலுக்கு பின் திரிணாமுல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த பலர், மீண்டும் திரிணாமுல் கட்சியில் இணைந்தனர். இந்த நிலையில், திரிணாமுல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பழைய தலைவர்களுக்கும், புதிய தலைவர்களுக்கும் இடையிலான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>