×

யூரோ கோப்பை கால்பந்து: அரையிறுதியில் டென்மார்க் தோல்வி..! பைனலில் இங்கிலாந்து-இத்தாலி பலப்பரீட்சை

லண்டன்: லண்டனில் நேற்று நடந்த நடப்பு கோப்பை கால்பந்து 2வது செமி பைனலில் டென்மார்க்கை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம், முதன் முதலாக இங்கிலாந்து, யூரோ கோப்பை பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. பைனலில் வலிமையான இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதவுள்ளன. லண்டனில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12.30 மணிக்கு துவங்கிய 2வது செமி பைனலில் டென்மார்க்கை எதிர்கொண்டது இங்கிலாந்து. போட்டி துவங்கியது முதலே டென்மார்க்கின் ஆதிக்கம்தான் அதிகம் இருந்தது. டென்மார்க்கின் இளம் வீரர்கள் மிக்கேல் டாம்ஸ்கார்ட், காஸ்பர் டோல்பெர்க் மற்றும் அனுபவ வீரர் மார்ட்டின் பிரைத்வெய்ட் ஆகியோர் ஃபார்வர்டில் மிரட்டினார்கள். இவர்களது அடுத்தடுத்த தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர்.

ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் டென்மார்க் அணிக்கு, பெனால்டி ஏரியாவுக்கு முன்னதாக ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. மிக்கேல் டாம்ஸ்கார்டின் உதையில் இங்கிலாந்தின் தடுப்பரணை தாண்டி அற்புதமாக பறந்து சென்று பந்து, கோல் போஸ்ட்டுகள் நுழைந்தது. பார்வையாளர்கள் 60 ஆயிரம் பேரில் 90 சதவீதம் இங்கிலாந்தின் ஆதரவாளர்கள். டென்மார்க்கின் இந்த கோலால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். அதன் பின்னரே இங்கிலாந்து வீரர்கள் துடிப்பாக ஆடத் துவங்கினர். ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவுக்குள் வலது ஓரத்தில் இருந்து இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஸ்டெர்லிங், அருமையான கிராஸ் ஷாட் மூலம் பந்தை பாஸ் செய்தார். சறுக்கிக் கொண்டே வந்து அதை தடுக்க முயன்ற டென்மார்க்கின் மிட்ஃபீல்டர் சைமன் காஜரின் காலில் பட்டு, அது கோல் ஆனது. சைமனின் இந்த சுய கோலால், இங்கிலாந்துக்கு முதல் கோல் கிடைத்தது. ஆட்ட இறுதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 104வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு ஒரு பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு கிடைத்தது.

இங்கிலாந்தின் கேப்டன் ஹாரி கேன் அடித்த ஷாட்டை டென்மார்க்கின் கோல் கீப்பர் காஸ்பர் தடுத்து விட்டார். ஆனால் பந்தை முழுவதுமாக அவர் பிடிக்கவில்லை. இதனால் அந்த பந்தை மறுபடியும் உதைத்து, ஒருவழியாக ஹாரி கேன் கோல் அடித்தார். இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி, முதன் முறையாக யூரோ கால்பந்து கோப்பை பைனலுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. நேற்று நடந்த முதலாவது செமி பைனலில் ஸ்பெயினை வீழ்த்திய, இத்தாலி அணியுடன் கோப்பையை கைப்பற்றுவதற்கான பைனல் போட்டியில் இங்கிலாந்து மோதவுள்ளது. இப்போட்டி லண்டன் விம்ப்ளே மைதானத்தில் இந்திய நேரப்படி வரும் 12ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு துவங்க உள்ளது.

Tags : Euro Cup ,Denmark ,England ,Italy , Euro Cup football: Denmark lose in the semi-finals ..! England-Italy multi-examination in the final
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது