×

பசுபதி குமாருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுத்ததற்கு சிராக் பஸ்வான் எதிர்ப்பு : கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருக்கு பதவியா என கேள்வி

டெல்லி : மோடி அமைச்சரவையில் தம்முடைய கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை சேர்த்ததாக லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரும் பீகாரைச் சேர்ந்த எம்.பி.யுமான பசுபதி பராஸ் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். தமக்கு கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவியை அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பசுபதி பராஸுக்கு கொடுத்ததால் சிராக் பஸ்வான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருப்பதாக சிராக் பஸ்வான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் எதிர்ப்பை பதிவிட்டு இருக்கும் அவர், நாடாளுமன்றக் குழு தலைவராக அவரை அங்கீகாரம் செய்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக கூறியுள்ளார். இதனிடையே ஒன்றிய அமைச்சர் பதவி ஏற்று இருக்கும் பசுபதி குமார் பராஸ், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் இடம் பெறாமல் லோக் ஜனசக்தி தனித்து போட்டியிட்டது.

பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாமல் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக மட்டுமே வேட்பாளர்களை லோக் ஜனசக்தி நிறுத்தியுள்ளது. பாஜகவுடன் மட்டும் கூட்டணி என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாகவும் சிராக் பஸ்வான் கூறினார்.பீகாரில் சொற்ப பலத்தில் நிதிஷ் குமார் மீண்டும் வெற்றி பெற்றார். இதற்கு சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதன் தொடர்ச்சியாகவே சிராக் பஸ்வானுக்கு எதிராக அவருடைய சித்தப்பா பசுபதி குமார் போர்க்கொடி தூக்கினார்.

Tags : Chirac Baswan ,Pashupati Kumar ,Union Minister , சிராக் பஸ்வான்
× RELATED ஒன்றிய அமைச்சர் ராஜினாமா ஏற்பு