×

ஆரணியில் அதிமுக ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் பட்டப்பகலில் வண்டல், மொரம்பு மண் கடத்தல்

*மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ஆரணி : ஆரணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிமுக ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் பட்டப்பகலில் வண்டல், மொரம்பு மண் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் அணைக்கட்டுகள் மற்றும் ஏரிகள் தூர்வாரி கரைகளில் மண் கொட்டி நிரப்பி பலப்படுத்தப்பட்டது.

மேலும், விவசாய பணிகளுக்கு வண்டல் மண் தேவை என்றால் கலெக்டர், கனிமவளத்துறை அதிகாரிகள், தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுத்து, பொதுப்பணித்துறையின் மூலம் மண்ணை எடுத்து பயன்படுத்தி கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து, வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் கடந்த ஆண்டே விண்ணப்பித்து தேவையான அளவு மண்ணை எடுத்து பயன்படுத்தி கொண்டனர்.

இந்நிலையில், ஆரணி சுற்றுவட்டார பகுதிகளான அடையபுலம், என்.கே.தாங்கல், நெசல், ஆகாரம், முள்ளண்டிரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளில் பட்டப்பகலில் அதிமுக கொடி வர்ணம் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஜேசிபி, டிப்பர் லாரிகள் மொரம்பு, வண்டல் மண் போன்றவற்றை சுரண்டி கொள்ளையடிக்கின்றனர்.

மேலும், மணல் மாபியாக்கள் எஸ்.வி.நகரம், விண்ணமங்கலம், முள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செய்யாற்று படுகை, கமண்டல நாகநதியில் இருந்து மணலை கொள்ளையடித்து வருகின்றனர். இதில் எம்.கே.தாங்கல் பகுதியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகருக்கு சொந்தமான செங்கல் சூளையில் மணல் பதுக்கி வைத்து லாரிகளில் கடத்தி விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு கனிம வளங்களை பாதுகாப்பதுடன், கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


மண் எடுக்க அனுமதி இல்லை

இதுகுறித்து ஆரணி தாசில்தார் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ‘ஆரணி பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்காக கடந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தில் வண்டல் மண் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு கடந்த ஆண்டே மண் எடுக்க உத்தரவு கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து விவசாயிகளும் தேவையான அளவிற்கு வண்டல் மண் எடுத்து பயன்படுத்தி கொண்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு கண்ணமங்கலம் பகுதியில் மட்டும் சில விவசாயிகள் விண்ணப்பித்து அவர்களும் 2 மாதத்திற்கு முன்பே வண்டல் மண் ஓட்டி முடித்து விட்டனர். அதன்பிறகு யாரும், வண்டல் மண், களி மண் கேட்டு மனு அளிக்கவில்லை. தனியார் இடமோ, அரசு இடமோ எதுவாக இருந்தாலும் மண் எடுக்க அனுமதி இல்லை. மண் கடத்தலில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


Tags : Batapakal ,Arrani , Aarani, Vandal Sand, ADMK Sticker, Sand Robbery
× RELATED ஆற்காடு அருகே நள்ளிரவு துணிகரம்...