×

வந்தவாசி அடுத்த தேசூர் ஏரி மதகு சீரமைத்தபோது நீர் மேலாண்மை தகவல்கள் பொறித்த 1,000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

* தொழில்நுட்பத்தை விளக்கும் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது


திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் ஏரி மதகு, கெங்கம்பூண்டி கிராமம் மற்றும் மகமாயி திருமணி கிராமம் ஆகிய இடங்களில் அரிய கல்வெட்டுக்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் தாசில்தார் ச.பாலமுருகன், வரலாற்று ஆய்வாளர்கள் பழனிச்சாமி, வெங்கடேஷ், எ.சுதாகர் மற்றும் பழனி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து, வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன் தெரிவித்ததாவது: தேசூர் ஏரி மதகை சீரமைக்கும்போது, பூமிக்கு அடியில் இருந்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது. கன்னரதேவனின் 22ம் ஆட்சியாண்டை சேர்ந்த கல்வெட்டு ஆகும்.
இந்த கல்வெட்டில் ஏழு வரிகள் மட்டுமே பொறிக்கப்பட்டு உள்ளன. கல்வெட்டு முழுமைபெறவில்லை. கல்வெட்டு இருந்த இடத்தில் அமைந்துள்ள பழைய அகமடை மதகில், இரண்டு புறம் உள்ள கல்பலகையில் அழகான  வேலைப்பாடுகள் அமைந்துள்ளன.

ஏரியில் இருந்து மதகு வழியாக நீர் வெளியேறும் தொழில் நுட்பத்தை விளக்குவது போன்று புடைப்பு சிற்பமும் இந்த கல்வெட்டில் ெசதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏரியின் வெளிப்பகுதியில் தாமரைப்பதக்கம் போன்ற தூண் பலகையும் காணப்படுகிறது. அதில், அசோக சக்கரத்தில் உள்ளது போன்று 24 இதழ்கள் அமைந்திருப்பது அரியவகையாகும்.

தமிழ்நாட்டில் கிடைக்கும் பெரும்பாலான கல்வெட்டுகளில், ஏரி வெட்டுதல், மதகு அமைத்தல், பாசன வசதி செய்தல், நீர் பங்கீடு, பாராமரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை செய்த விவரங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழர்கள் நீர் மேலாண்மையின் அவசியத்தை உணர்ந்திருப்பதை தெரிந்துகொள்ள இந்த கல்வெட்டுகள் சான்றாக அமைந்திருக்கிறது.

பொது நீர்நிலையான ஏரிகளை அமைப்பது, அவற்றை பாதுகாப்பது ஆகியவற்றை தமிழர்கள் அறச்செயலாக கருதி செயல்பட்டுள்ளனர் என்பதையும் இந்த கல்வெட்டின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.அதேபோல், கெங்கம்பூண்டி ஊரின் நடுவே தற்போது கடவுள் வழிபாடாக உள்ள பலகை கல்வெட்டும் முக்கியமானதாகும். அந்த கல்வெட்டில் உள்ள தகவல்களை ஆய்வுக்காக தொல்லியல் அறிஞர் சு.ராஜகோபாலிடம் அளித்தோம்.

அவற்றை ஆய்வு செய்த அவர், 10ம் நூற்றாண்டில், பராந்தக சோழனின் 30 ஆட்சியாண்டு காலத்தில் வெட்டப்பட்டது என உறுதி செய்திருக்கிறார். மேலும், சிங்கபுர நாட்டை சேர்ந்த கங்கபூண்டி என்ற ஊரில் உள்ள மனங்காடு காலமுக்தி என்பவர் நீர்வழி கால்வாய் (பெரிய மடை) ஒன்றை உருவாக்கினார் என்பதை இக்கல்வெட்டு தகவல் தெரிவிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், மகமாயி திருமணி கிராமத்தின் மாந்தாங்கல் பகுதி ஏரியில் உள்ள பாறையில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அதில் உள்ள எழுத்துக்களின்படி 9 அல்லது 10 நூற்றாண்டாக இருக்கலாம் என தெரிகிறது. ஏரிக்கு ஐநூற்றுவர் சபை மதகு (தூம்பு) அமைத்து கொடுத்ததையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டுகள் மூலம், தேசூர் பகுதியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தது உறுதியாகியிருக்கிறது. மேலும், மதகில் புடைப்பு சிற்பமும், தாமரைப்பதக்கம் உள்ள தூணும் அப்பகுதியின் தொன்மைக்கு சான்றாகும்.  

இந்த கல்வெட்டுக்களை பாதுகாப்பதும், பராமரிப்பதும், பண்டைய கால தொழில் நுட்பத்தை அறிந்து கொள்வதும் அவசியமாகும். எனவே, இவற்றை பாதுகாக்க அரசும் அப்பகுதி மக்களும் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Vandavasi ,Desur Lake , Tiruvannamalai, Vandavasi,Stone Sculpture, Water Sculpture
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு