×

ஒகேனக்கல்லில் ஐந்தருவியை பார்வையிட உயர் கோபுரம்

*சுற்றுலாத்துறை இயக்குனர் தகவல்

பென்னாகரம் : ஒகேனக்கல்லில் ஐந்தருவியை ஒரே இடத்தில் நின்று பார்வையிட உயர் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை இயக்குனர் தெரிவித்தார்.  தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை, மேம்படுத்துதல் தொடர்பாக சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனரும், சுற்றுலாத்துறை இயக்குனருமான சந்தீப் நந்தூரி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், ‘ஒகேனக்கல்லுக்கு விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கில் வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், வனத்துறை பூங்கா, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் பராமரிக்கப்படும். வண்ண மீன் கண்காட்சியகத்தில் மீன்கள் முறையாக பராமரிக்கப்படும், அருவியின் அழகைக்காண கண்காணிப்பு கோபுரம், சினி அருவியில் அனைவரும் சென்று நீராடும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஐந்தருவியை ஒரே இடத்தில் நின்று பார்வையிட உயர் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும்.

தவிர வாய்ப்புள்ள இடங்களில் நீரை தடுத்து, செயற்கையான அருவி உருவாக்கப்படும். மேலும், ஒகேனக்கல் முகப்பில் இதுகுறித்து விவரங்களை அறியும் வகையில் பதாகைகள் அமைக்கப்படும். வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.  இந்த ஆய்வின் போது கலெக்டர் திவ்யதர்சினி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வைத்தியநாதன், சப் கலெக்டர் சித்ரா விஜயன், வன பாதுகாவலர் தீபக். எஸ்.பல்கி, பென்னாகரம் தாசில்தார் பாலமுருகன், பிடிஓக்கள் வடிவேலன், ஜெகதீசன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Tags : Okenegal , Hogenakkal,Five Falls,High tower, Tourist Department
× RELATED ஒகேனக்கல் செல்ல அனுமதி மறுத்ததால்...