×

பூங்காக்களை திறக்க அனுமதிக்காததால் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

*கட்டுப்பாடுகளுடன் திறக்க வியாபாரிகள் கோரிக்கை

சேலம் : ஏற்காடு செல்ல அனுமதி வழங்கப்பட்டாலும், பூங்காக்களை திறக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வியாபாரிகளும் கட்டுப்பாடுகளுடன் பூங்காக்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக, ஏற்காடு உள்ளது. ஏற்காட்டில், படகு இல்லம், அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் மலைக்கோயில், பக்கோடா பாயிண்ட், கிளியூர் நீர்வீழ்ச்சி என பல சுற்றுலா பகுதிகள் உள்ளன.

இதனால், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்து செல்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஏற்காட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டன. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், ஏற்காடு அடிவாரத்திலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அத்தியாவசிய தேவைக்காக செல்வோர் மட்டும் இ-பாஸ் பெற்று செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன், கொரோனா காரணமாக, தொடர்ச்சியாக 2வது வருடமாக, நடப்பாண்டும் கோடை விழா மலர்கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்ததுடன், இதனை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். பல கோடி அளவிற்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதனிடையே, கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த 5ம் தேதி முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதுடன், ஏற்காடு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருந்த பொதுமக்கள் ஏற்காடு செல்லும் ஆவலில் இருந்தனர்.

 இந்நிலையில், நோய் பரவலை கருத்தில் கொண்டு, ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் திறக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன், ஏற்காட்டில் உள்ள வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

 இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா பரவல் காரணமாக, எப்போதும் இல்லாத வகையில் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் கோடை விழா நடத்தபடப்படவில்லை. ஏற்காட்டில் கோடை விழா மற்றும் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே, நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கடை அமைத்துள்ளனர். கொரோனாவால் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் சுற்றுலா பயணிகள் வராததால், வியாபாரம் இன்றி கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளோம்.

தற்போது பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பூங்காக்களை திறக்கவில்லை. அதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் ஏற்காடு வர தயக்கம் காட்டுகின்றனர். இதனால், ஊரடங்கு தளர்வு வழங்கியும், இங்குள்ள வியாபாரிகளுக்கு எந்தவித பலனும் இல்லாமல் போனது. எனவே, ஏற்காட்டில் உள்ள அனைத்து பூங்காக்களையும் திறப்பதுடன், கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : Yercaud , Salem, Yercaud, Sales person Request, Park, Tourist
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து