×

ஏடிஎம்-மில் பண இருப்பை அறிய பிரத்யேக செயலியை உருவாக்கி ஹரியானா கும்பல் கொள்ளை

சென்னை: ஏடிஎம்-மில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிய பிரத்யேக செயலியை உருவாக்கி அதன் மூலம் ஹரியானா கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் இப்படியும் பணம் திருடு போகுமா என புருவத்தை உயர்த்திய சம்பவம் தான் இது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் டெபாசிட் ஏடிஎம்களை குறிவைத்து நூதன முறையில் பல லட்சங்களை சுருட்டிக்கொண்டு தப்பியோடியது ஹரியானா மாநில மேவாட்டை சேர்ந்த கொள்ளை கும்பல்.

அவர்கள் பற்றிய துப்புக்கு துலங்கியவுடன் ஹரியானாவிற்கு விரைந்தது தமிழ்நாடு காவல்துறை தனிப்படை. கொள்ளையில் ஈடுபட்ட அமீரர், வீரேந்திர ராபர்ட், நஜிமுசைன், கொள்ளை கும்பலின் தலைவன் சவுகத் அலி ஆகியோர் அடுத்தடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கடைசியாக கைது செய்யப்பட்ட சவுகத் அலியை பெரியமேடு காவல்துறையினர் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

பெரியமேடு எஸ்பிஐ ஏடிஎம்மில் மட்டும் 190 முறை ஸ்வைப் செய்து 16 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. கொள்ளையடிப்பதற்கு முன் ஏடிஎம் மையங்களில் பண இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள அதற்கென்று பிரத்யேக செயலியை ஹரியானா கொள்ளையர்கள் உருவாக்கி இருப்பதும் விசாரணை மூலம் அம்பலமாகியுள்ளது.

ஏடிஎம் எந்திரங்களில் கொள்ளையடிப்பது குறித்த முழு பயிற்சியை ஹரியானாவில் மேற்கொண்டதாகவும் காவல்துறையினரிடம் சிக்கினால் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டதாக சவுகத் அலியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளையடித்தது எப்படி என்பதை சவுகத் அலியை நடித்துகாட்ட சொல்லி அதனை வீடியோவாக பதிவு செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய செயலியின் பெயர் கொள்ளையடிக்கப்பட்ட பணம் உள்ளிட்ட விவரங்களை சவுகத் அலியிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Haryana , ATM, fraud
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...