மத்திய இணையமைச்சரான தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து!!

சென்னை : மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 15 பேர் கேபினட் அமைச்சர்கள். மீதமிருக்கும் 28 பேர் இணை அமைச்சர்கள்.புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து தேர்வாகி, மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல். முருகனுக்கு மீன்வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை கால்நடை மற்றும் பால்வளத் துறை இலாகா ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், மத்திய இணையமைச்சரான எல். முருகனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அப்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் உங்களது பணி அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு.எல். முருகன் அவர்கள், தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் நல்குவதாகத் தெரிவித்தார்.

அதேபோல் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு பிரதமர் மோடிதலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் திரு. எல்.முருகன் அவர்கள் மாண்புமிகு மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>