×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: காயத்தால் விலகினார் ஹாலெப்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹாலெப் அறிவித்துள்ளார். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிரெஞ்ச் ஓபன் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் மே 24ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளன. பிரதான சுற்று மே 30ம் தேதி தொடங்கி ஜூன் 13 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக முன்னணி வீரர், வீராங்கனைகள் முனைப்புடன் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், 2018 பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஹாலெப் (ருமேனியா, 3வது ரேங்க்), காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். கடந்த வாரம் இத்தாலியன் ஓபன் 2வது சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் மோதியபோது அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. ‘கெண்டைக்கால் தசை கிழிந்துள்ளதால் குணமடைய நீண்ட நாட்கள் ஆகும், ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால் பிரெஞ்ச் ஓபனில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன். பாரிசில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது என்னை சோகத்தில் ஆழ்த்தினாலும், விரைவில் குணமாகி மீண்டும் களமிறங்கும் உறுதியுடன் உள்ளேன். 2022ல் நிச்சயமாக இங்கு விளையாட முடியும் என நம்புகிறேன்’ என்று ஹாலெப் தெரிவித்துள்ளார். களிமண் தரை மைதானங்களில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் ஹாலெப் 2014 மற்றும் 2017ல் இறுதிப் போட்டி வரை முன்னேறி 2வது இடம் பிடித்துள்ளதுடன், 2018ல் தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் இங்கு வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது….

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: காயத்தால் விலகினார் ஹாலெப் appeared first on Dinakaran.

Tags : French Open Tennis ,Halep ,Paris ,Simona Halep ,French Open Grand Slam ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஸ்குவாஷ் வேலவன் சாம்பியன்