×

வீடுகள் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு: தாம்பரம் தாசில்தார் அறிக்கை தரவும் உத்தரவு

சென்னை:  தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம்  ஏரியில் அப்பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது,  தாம்பரம் நகராட்சியின் கழிவுநீர் கொட்டப்படுவது, ஆக்கிரமிப்புகள்  அதிகரிப்பது குறித்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அறப்போர்  இயக்கத்தின் சார்பில் சுரேஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், சிட்லபாக்கம் ஏரியை ஆக்கிரமித்து சுமார் 400 வீடுகள் எந்த திட்ட அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ளன. ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் கால்வாய் 32 அடியிலிருந்து 10 அடியாக குறைந்துள்ளது. மொத்தம் 97 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரி தற்போது 50 ஏக்கராக குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளில் இருந்து ஏரியில் சுமார் 2 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்கிறது.

இதனால் ஏரி மாசடைந்ததுடன் மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏரி  ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தாம்பரம் தாசில்தாருக்கு  2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை  நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி  அடங்கிய அமர்வில் மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுப்பணித்துறை  தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அப்பகுதில் குறிப்பிட்ட சர்வே  எண்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மேலும்  ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை அகற்ற நடவடிக்கை  எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்டு வழக்கை  6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

 வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு  வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ஏரி புறம்போக்கில் 403  ஆக்கிமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றார்.அதற்கு அரசு தரப்பு வக்கீல்,  தமிழக சட்டப்பேரவை தேர்தல் காரணமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.  தாசில்தார் அறிக்கை தர கால அவகாசம் தரவேண்டும் என்றார். வழக்கை  விசாரித்த நீதிபதிகள், சிட்லபாக்கம் ஏரி பகுதியில் பல்வேறு சர்வே எண்களில்   403 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் மற்றும் கொரோனா 2வது அலை காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றம், நடவடிக்கை குறித்து  அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யமுடியவில்லை.

தற்போது தேர்தல்  முடிந்துவிட்டது. கொரோனா 2வது அலைக்கான ஊரடங்கும் பெருமளவில்  தளர்த்தப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு ஏரி பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டத்தின் அரசு  உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரசு எடுத்த  நடவடிக்கை குறித்த அறிக்கையை தாம்பரம் தாசில்தார் 2 மாதங்களுக்குள் தாக்கல்  செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : ICC ,Chittagong Lake ,Tambaram Tashildar , Houses, Charge, Chittagong Lake, I.C., Tashildar
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...