சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மறுசுழற்சி பணிகள் குறித்து ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்து கையாளும் பணிகளை  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் திடக்கழிவு மேலாண்மை மாநில கண்காணிப்புக் குழுத் தலைவர் நீதியரசர் ஜோதிமணி நேற்று முன்தினம் (6ம் தேதி) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தெற்கு வட்டார துணை ஆணையர் சிம்ரன்ஜீத் சிங்  கலான், தலைமைப் பொறியாளர் மகேசன்,  மேற்பார்வை பொறியாளர் வீரப்பன் ஆகியோர் உடனிருந்தனர். பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் இயங்கும் தோட்டக்கழிவுகள் மறுசுழற்சி ஆலையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தோட்டக்கழிவுகள் மற்றும் தேங்காய் ஓடுகளில் இருந்து உருவாக்கப்படும் பொருட்களின் பயன்பாடுகள் குறித்தும்,  சென்னை மாநகராட்சியினால் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 400 டன் திறன் கொண்ட ஆலைகளில் தோட்டக்கழிவுகள்  கையாளப்பட்டு வருவது குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி  செய்யும் ஆலையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டிடக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும் செயல்முறை குறித்தும், கட்டிடக் கழிவுகளின் அளவுகள் குறித்தும் கேட்டறிந்தார்.இதையடுத்து, பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் பல வருடங்களாக கொட்டப்பட்டு வந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில்  பிரித்தெடுத்து நிலத்தினை மீட்டெடுக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு,  பணிகளை வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், பள்ளிக்கரணை குப்பைக் கொட்டும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயோ மைனிங் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, சிமெண்ட் ஆலைகளில் ஆர்.டி.எப் கழிவுகளை பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றி அமைக்கக் கோரலாம் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தினமும் 100 டன் ஈரக்கழிவுகளை கையாளும் வகையில் சேத்துப்பட்டில் தனியார் பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆலையை பார்வையிட்டு ஆலையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

Related Stories:

>