×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை திருச்சி தனியார் கல்லூரி பேராசிரியர் கைது


திருச்சி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி பேராசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த பேராசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா முதல் அலைக்கு பின் கடந்த மார்ச்  மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கொரோனா 2வது அலையால்  பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்ற நிலையில், திருச்சி  புத்தூரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன்  மீது அத்துறையில் முதுகலை முதலாமாண்டு பயின்ற 5 மாணவிகள், பாலியல் புகார்  தெரிவித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்தது. பின்னர் அந்த அறிக்கையை கல்லூரி முதல்வர் பால் தயாபரனிடம் வழங்கினர்.

இதையடுத்து கடந்த மாதம் 30ம்தேதி, பால்சந்திரமோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மேலும் 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிஷா தெரிவித்திருந்தார். அதன்படி, மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்ததையொட்டி விரிவான அறிக்கையை திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிஷா, மாநகர போலீஸ் கமிஷனர் அருணிடம் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த கமிஷனர் அருண், ரங்கம் அனைத்து மகளிர் போலீசுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், பால் சந்திரமோகன், இதற்கு உடந்தையாக இருந்ததாக பேராசிரியை நளினி சுந்தரி ஆகியோர் மீது 294 (பி) ஆபாசமாக பேசுதல், 354 (ஏ), (டி) பாலியல் துன்புறுத்தல் தண்டனை உள்பட 5 பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து, நேற்று பேராசிரியர் பால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டார். பேராசிரியை நளினிசுந்தரியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Trichy , Student, sexual harassment, private college, arrested
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்