×

பதிவாளர், விலை நிர்ணயக்குழு ஒப்புதலின்றி கூட்டுறவு சங்க நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட விற்கக்கூடாது

* ஐகோர்ட் கிளை நீதிபதி அதிரடி உத்தரவு
* ரத்தை எதிர்த்தவருக்கு ரூ.10 லட்சம் அபராதம்

மதுரை, ஜூலை 8: பதிவாளர், விலை நிர்ணய குழு ஒப்புதலின்றி கூட்டுறவு சங்க நிலங்களில் ஒரு அங்குலத்தை கூட விற்பனை செய்யக்கூடாது என ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு சொந்தமான இரு சொத்துக்கள் தேனூர் கிராமத்தில் உள்ளன. இந்த சொத்துக்கள் தொடர்பாக மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் சமரச உடன்படிக்கை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இதன்படி, சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சண்முகானந்தம் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர், அரசின் விலை நிர்ணயக்குழு அனுமதியின்றி, நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதால், விற்பனையை ரத்து செய்வதாக கடந்த 24.8.2020ல் திருச்சி கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சண்முகானந்தம், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: கூட்டுறவு சங்கங்களில் நடக்கும் முறைகேட்டிற்கு சிறந்த உதாரணமாக இந்த வழக்கு உள்ளது. மோசடியாக சமரச உடன்படிக்கையை ஏற்படுத்தி, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளனர். பின்னர், சொத்தை குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். வீட்டு வசதி சங்கத்தின் சொத்து மனுதாரருக்கு ரூ.62 லட்சத்து 55 ஆயிரத்து 600க்கு  விற்கப்பட்டுள்ளது. இந்த சொத்தை மனுதாரர் 21 நாளில் வேறொருவருக்கு ரூ.2.34 கோடிக்கு விற்று, 21 நாளில் ரூ.1 கோடியே 71 லட்சத்து 44 ஆயிரத்து 400 சம்பாதித்துள்ளார். இந்த மோசடி குறித்து கூட்டுறவு சங்க செயலர் உள்ளிட்ட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை முடித்து 3 மாதத்தில் மோசடியில் தொடர்புடைய அனைவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த மோசடியில் தொடர்புடைய கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும். இதுபோன்ற மோசடி மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏற்கனவே நலிவடைந்த நிலையில் இருக்கும் கூட்டுறவு சங்கங்களை மூடும் நிலை ஏற்படும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை, ஜூலை 28க்குள் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு மனுதாரர் செலுத்த வேண்டும். தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் சொத்துக்களில் ஒரு அங்குலம் நிலம் கூட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் அரசால் நியமிக்கப்படும் விலை நிர்ணய குழுவின் ஒப்புதல் இன்றி விற்பனை செய்யப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்கங்களின் சொத்துக்கள் விற்பனை தொடர்பாக தணிக்கை நடத்த வேண்டும். இதில்,  எங்காவது மோசடி நடந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

வீட்டு வசதி சங்கத்தின் சொத்து  மனுதாரருக்கு ரூ.62 லட்சத்து 55 ஆயிரத்து 600க்கு  விற்கப்பட்டுள்ளது. இந்த  சொத்தை மனுதாரர் 21 நாளில் வேறொருவருக்கு ரூ.2.34 கோடிக்கு விற்று, 21  நாளில் ரூ.1 கோடியே 71 லட்சத்து 44 ஆயிரத்து 400 சம்பாதித்துள்ளார்.

Tags : Registrar ,Pricing Committee , Registrar, Price, Co-operative Land,
× RELATED கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான...