×

பாலிவுட் படங்களின் சூப்பர்ஸ்டார் திலீப் குமார் காலமானார்: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

மும்பை: பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த திலீப்குமார், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 98. இந்தி சினிமாவின் மூத்த நடிகராக இருந்த திலீப்குமார், வயதின் காரணமாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று காலை காலமானார். திலீப் குமாரின் இயற்பெயர் யூசுப் கான். 1922 டிசம்பர் மாதம் 11ம் தேதி,  மோஹால்லா குடாடாட் என்ற ஊரில் திலீப்  குமார் பிறந்தார். இது பாகிஸ்தானிலுள்ள பெஷாவருக்கு அருகில் இருக்கிறது. இந்திய அளவில் புகழ்பெற்ற திரைப்பட நடிகரான அவர், மும்பை பாந்த்ரா புறநகர் பகுதியிலுள்ள பாலி குன்றில் வசித்து வந்தார்.  

1930களில் திலீப் குமார் குடும்பம் மும்பைக்கு இடம்பெயர்ந்தது. 1943ல்  நடிகை தேவிகா ராணி, திலீப் குமார் பாலிவுட்டில் அறிமுகமாக உதவி செய்தார்.  அமியா சக்ரவர்த்தி என்பவர் திலீப் குமார் என்ற பெயரை சூட்டினார். பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற முதல் நடிகர் என்பது மட்டுமின்றி, 8 முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். திரையுலகில் திலீப் குமாரின் பல வருட சேவை மற்றும் சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு 1994ல் தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது. மேலும், 1991ல் பத்ம பூஷண் விருதையும், 2015ல் பத்ம விபூஷண் விருதையும் இந்திய அரசு வழங்கி மரியாதை செய்தது. 2000ல் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினராக திலீப் குமார் இருந்தார்.1966ல் நடிகை சாயிரா பானுவை திலீப்  குமார் காதல் திருமணம் செய்துகொண்டார். 1980ல் மும்பை ஷெரீப்பாகவும்  நியமிக்கப்பட்டார்.

திலீப்குமாரின் மறைவுக்கு ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, நடிகர்கள் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, அனில் கபூர் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தர்மேந்திரா, ஷாருக்கான் நேரில் அஞ்சலி செலுத்தினர். அமிதாப், ஷாருக்குக்கு முன்னோடி: 1944 முதல் 1998 வரை 54 ஆண்டுகள் பாலிவுட் படவுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த திலீப் குமார், பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்தார். 1944ல் ஜ்வார் பாட்டா என்ற படத்தில் திலீப் குமார் நடித்தார். இதுதான் அவரது முதல் படம்.  ரொமான்டிக் கேரக்டரில் அந்தாஸ் (1949), முரட்டு அடியாளாக ஆன் (1952), காதல் தோல்வியால் குடிகாரனாக தேவதாஸ் (1955), காமெடியில் ஆஸாத் (1955), சரித்திரக் காதல் பின்னணியில் முகல் ஏ ஆஸம் (1960) மற்றும் சமூக கதாபாத்திரத்தில் கங்கா ஜமுனா (1961) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

1976ல் பாலிவுட்டை விட்டு வெளியேறி 5 வருடங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டார். மீண்டும் 1981ல் நடிக்க வந்தார். 1998ல் அவர் நடித்த கடைசி படம், ஃகிலா. மொத்தம் 62 படங்களில் மட்டுமே நடித்த திலீப்குமார், 50க்கும் அதிகமான வெற்றி படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் ஆனார். அவரது நடிப்பு பாணியைத்தான் அமிதாப்பச்சன், ஷாருக்கான் பின்பற்றி சினிமாவில் ஜொலித்தனர். நேற்று மாலை மும்பையில் முழு அரசு மரியாதையுடன் திலீப்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்தி நடிகர் திலீப்குமார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: புகழ்பெற்ற இந்திய திரைக்கலைஞரும் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான திலீப்குமார், தனது 98வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.“Tragedy king” என்று அனைவராலும் அறியப்பட்ட திலீப்குமார் இந்திய திரையுலகின் ஜாம்பவனாக திகழ்ந்தார். இவர் திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே மற்றும் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூசன் முதலிய பல்வேறு விருதுகளை பெற்றவர் என்பதோடு, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதினை எட்டு முறை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கலைப்பணியுடன் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மக்கள் பணியும் ஆற்றிய அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகத்திற்கும், அவரது அன்பு ரசிகர்களுக்கும் என்னுடைய சார்பாக மட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் சார்பாகவும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Tags : Bollywood ,Dilip Kumar ,President , Bollywood, Superstar, Dilip Kumar, President, Prime Minister
× RELATED வேடசந்தூர் அருகே மது விற்றவர் கைது