×

பைனலில் அர்ஜென்டினா

பிரேசில்லா: கோபா கோப்பை  தொடரின் 2வது அரையிறுதில் கொலம்பியா அணியை போராடி வீழ்த்திய அர்ஜென்டினா 29வது முறையாக  இறுதிப்போட்டிக்கு  முன்னேறியது. கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் நேற்று அர்ஜென்டினா - கொலம்பியா அணிகள் மோதின.   ஆரம்பத்தில் அதிரடி காட்டிய அர்ஜென்டினா, ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே கோல் போட்டு முன்னிலை பெற்றது. அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி  வாகாக கடத்திக் கொடுத்த பந்தை  சக வீரர்    லாடரோ மார்டினெஸ் துல்லியமாக கோலாக்கினார். ஆனால், அதன் பிறகு கொலம்பிய வீரர்கள் வேகமெடுத்தனர். தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்ததன் பலனாக ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் கொலம்பியா வீரர் லூயிஸ் டியஸ் அபாரமாக கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது.

அதன் பிறகு இரு அணிகளும் கோலடிக்க  மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. மெஸ்ஸி அற்புதமாக பாஸ் செய்த பந்தை ஏஞ்சல் டி மரியா மின்னல் வேகத்தில் அடிக்க, அது கோல் கம்பத்தில் பட்டுத் தெறித்து வெளியேறியது அர்ஜென்டினா வீரர்களையும் ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இரு அணி கோல் கீப்பர்களும் துடிப்புடன் செயல்பட்டு மேற்கொண்டு கோல் ஏதும் விழாமல் பார்த்துக்கொள்ள, ஆட்டம் டிராவில் முடிந்தது. புதிய ஹீரோ மார்டினஸ்: இதையடுத்து, ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் தலா 5 வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில்  அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில்  வென்று 29வது  முறையாக  கோபா கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அர்ஜென்டினா அணி கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் தான் என்றால் மிகையல்ல. பெனால்டி ஷூட் அவுட்டில் கொலம்பியா வீரர்களின் 3 முயற்சிகளை பறந்து பறந்து! தடுத்த அவர் வெற்றியை வசப்படுத்த உதவினார்.அர்ஜென்டினா அணியின் நிரந்தர ஹீரோ மெஸ்ஸி தான் என்றாலும், இந்த போட்டியில் தனது அமர்க்களமான கோல் கீப்பிங் திறமையால் எமிலியானோ மார்டினஸ் புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார். சக வீரர்கள் மட்டுமல்ல, கால்பந்து ஜாம்பவான்களும் ரசிகர்களும் அவரது மாயாஜாலத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.

இந்திய நேரப்படி ஜூலை 11ம் தேதி காலை 5.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் இறுதி ஆட்டத்தில்  பிரேசில் - அர்ஜென்டீனா அணிகள் களம் காண உள்ளன.  நட்சத்திர வீரர்கள் நெய்மர் - மெஸ்ஸி தலைமையிலான அணிகள் மோதும் இந்த போட்டி, உலக அளவில் கால்பந்து ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது. 3வது இடத்துக்கான ஆட்டத்தில் பெரு-கொலம்பியா அணிகள் ஜூலை 10ம் தேதி காலை 5.30 மணிக்கு மோத உள்ளன.

Tags : Argentina , Argentina, Copa America Cup, football
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் பைனலில் ரோகன் – எப்டன்