×

நந்திகிராம் தேர்தல் வழக்கில் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம்: விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

புதுடெல்லி: நந்திகிராம் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மம்தா பானர்ஜிக்குரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. எனினும், நந்திகிராம் தொகுதியில் பா.ஜ வேட்பாளரான சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வி அடைந்தார். இந்நிலையில், சுவேந்துவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா வழக்கு தொடர்ந்தார். இதை   நீதிபதி கவுசிக் சந்தா விசாரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மம்தா, ‘நீதிபதி கவுசிக் சந்தா, பாஜ.வின் தீவிர ஆதரவாளர். அவர் இந்த வழக்கை  விசாரிக்க கூடாது,’ என குற்றம் சாட்டினார். மேலும், அவரிடம் இருந்து வழக்கை மாற்றும்படி மனுவும் தாக்்கல் செய்தார்.

    இந்த வழக்கு நீதிபதி கவுசிக் சந்தா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி  கவுசிக்., ‘நந்திகிராம் வழக்கில் இருந்து விலகி கொள்கிறேன். இதில் மனுதாரருக்கு எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது. எனக்கென்று ஒதுக்கப்பட்ட வழக்கை விசாரிப்பது எனது கடமை.  இருப்பினும், இந்த விவகாரத்தில் நீதித்துறையை மிகவும் மனுதாரர் சாடியுள்ளதை கண்டிப்பாக ஏற்க முடியாது. அதனால் அவருக்கு ரூ.5 லட்சம் நீதிமன்றம் அபராதம் விதிக்கிறது. இந்த தொகையானது கொரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு உதவும் விதமாக வழங்கப்படும்,’’ என உத்தரவிட்டார்.

Tags : Mamata Banerjee ,Nandigram , Nandigram, Election, Mamata Banerjee, Fines, Trial, Judge
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...