தனியாருக்கு தாரைவார்க்க இனி எல்லாமே ‘ஈஸி’ பொது நிறுவனங்கள் துறை நிதியமைச்சகத்தின் கீழ் வந்தது: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் பொது நிறுவனங்கள் துறை, நிதியமைச்சகம் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.   பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகளை பெருக்கவும், அதன் மூலம் வருவாய் ஈட்டவும் முந்தைய ஒன்றிய அரசுகள் முயற்சித்தன. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது முதலீட்டு அமைச்சகம் உருவாக்கப்பட்டு, நிதி அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டது. மேலும், அந்நிய  முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (எஃப்ஐபிபி) ரத்து செய்யப்பட்டு வெளிநாட்டு  முதலீடுகளின் நிர்வாகம் நிதி அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களை கட்டி காத்து வேலைவாய்ப்பு பெருகி வருவாய் ஈட்ட முந்தைய காங்கிரஸ் அரசும் தீவிர நடவடிக்கை எடுத்தது. ஆனால், 2014ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு பதவியேற்றத்தில் இருந்தே அரசின் கீழ் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, போதிய லாபம் ஈடவில்லை என கூறி பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாகவும், சில வங்கிகளை முழுமையாகவும், சில துறைகளில் ஒவ்வொரு பகுதியாகவும் தனியாருக்கு ஒன்றிய அரசு தாரைவார்த்து வருகிறது. 300க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை வெறும் 12 ஆக குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.  கடந்த 2021-22ம் ஆண்டுகான ஒன்றிய பட்ஜெட்டில் 2 பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்ஐசி போன்ற பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால், வேலைவாய்ப்பு பறி போவதுடன்  சமூகநீதி, இட ஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய அபாயம் ஏற்படும். மோடி அரசும் மக்களுக்கான அரசாக இல்லாமல் கார்ப்ரேட் முதலாளிகளுக்கான அரசாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.  

இந்நிலையில், தனது லட்சியத்தை எளியதாக்கும் வகையில் பொது நிறுவனங்களின் துறையை நிதி அமைச்சகத்துடன் ஒன்றிய அரசு இணைத்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை, ‘நிதி அமைச்சகத்தில் நிதி சேவை துறையின் கீழ் பொது நிறுவனத்துறை கொண்டு வரப்பட்டுள்ளது என்று ஜூலை 6ம் தேதியிட்டு அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது. இது, இந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) 365 திருத்த விதிகள், 2021 என்று அழைக்கலாம். இவை ஒரே நேரத்தில் நடைமுறைக்கு வரும். பொது நிறுவனங்கள் துறை நிதி அமைச்சகத்திற்கு கீழ் மாற்றுவது  மூலதன செலவு, சொத்து பணமாக்குதல் மற்றும்  நிதி ஆரோக்கியத்தை திறம்பட கண்காணிக்க உதவும்.

​​நிதி அமைச்சகம் பொருளாதார  விவகாரங்கள், வருவாய், செலவு, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை  மற்றும் நிதி சேவைகள் ஆகிய ஐந்து துறைகளைக் கொண்டுள்ளது. தற்போது கூடுதலாக பொது நிறுவனங்கள் துறை சேர்க்கப்பட்டுள்ளதால் நிதி அமைச்சகத்தின் கீழ் இது ஆறாவது துறையாக இருக்கும். அதே நேரத்தில் கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவன அமைச்சகம் இப்போது கனரக தொழில்துறை அமைச்சகம் என்று அழைக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>