×

2021 சட்டமன்ற தேர்தலில் அமைந்த அதிமுக கூட்டணி தொடரும்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை

சென்னை: 2021 அதிமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள கூட்டரிக்கை: தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக, அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டது. மக்கள் தொண்டில் தங்களை இணைத்துக்கொள்ள ஆர்வம் கொண்ட பல்வேறு அமைப்புகளும், தோழமை இயக்கங்களும் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணிக்கு ஆதரவு அளித்தன. தமிழ் நாட்டு வாக்காளர்கள் அளித்த பேராதரவு காரணமாக 75 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களாக இன்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். வெறும் 3 விழுக்காடு வாக்குகள் வித்தியாசத்தில்தானே கழகம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது.

அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நாம் ஆட்சியை இழந்திருந்தாலும், மக்களின் ஆதரவு தொடர்கிறது. தேர்தல் முடிவுகள் சற்றே தொய்வையும், மனச் சோர்வையும் ஏற்படுத்தி இருந்தாலும், கொண்ட கொள்கையின் காரணமாக பொது வாழ்வு என்னும் புனிதப் பயணம் வீருநடை போடுகிறது.  இப்பொழுது நாம் ஆற்ற வேண்டிய பணிகள் நம் முன் அணிவகுத்து நிற்கின்றன. அரசியல் வாழ்வு என்பதே இடைநிற்றல் இல்லாத லட்சியப் பயணம் தானே. இலக்கினை அடையும் வரை வீரனுக்கு ஏது ஓய்வும், சோர்வும்.

நம் இலக்கு பொற்கால அரசை மீண்டும் அமைப்பதும், எதிரிகளால் இருள் சூழ்ந்திருக்கும் தமிழ் நாட்டை ஒளிமயமான பொன்னுலகிற்கு இட்டுச் செல்வதாக மட்டுமே இருக்கிறது. வேறு எந்த சிந்தனையும் நம் மனதில் ஏற்படத் தேவையில்லை. அதிமுக 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது என்பதிலும், நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாய் இருந்து, தமிழ் நாட்டின் உயர்வுக்கென உழைப்போம் என்பதிலும், யாருக்கும், எப்போதும், எவ்வித ஐயமும் எழத் தேவையில்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

Tags : AIADMK ,elections ,OPS ,EPS , AIADMK alliance to continue in 2021 assembly elections: OPS, EPS joint statement
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...