×

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 15 அணைகள் சுற்றுலாத்தலமாக மாறுகிறது: தமிழக அரசு உத்தரவு

சென்னை: நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 15 அணைகள் சுற்றுலாத்தலமாக மாற்ற சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக சுற்றுலா, தோட்டக்கலை துறை இயக்குனர் அணைகள் பாதுகாப்பு இயக்கக தலைமை பொறியாளர் ஆகிய 3 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 89 அணைகள் உள்ளது. இதில், மேட்டூர், பவானிசாகர், அமராவதி, முல்லை பெரியாறு, சோலையாறு, சாத்தனூர், கிருஷ்ணகிரி, பாபநாசம், வைகை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பரம்பிகுளம், ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 15 முக்கிய அணைகள் அடக்கம். இங்கு,சுற்றுலா மேம்பாட்டு பணிகளைமேற்கொள்ளும் வகையில், அணைகள் பாதுகாப்பு இயக்க தலைமை பொறியாளர் ராஜா மோகன், சுற்றுலாத்துறை இயக்குனர், தோட்டக்கலைத்துறை இயக்குனர் கொண்ட குழு நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம் அணைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, விழுப்புரம், நீலகிரி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆய்வு செய்துள்ளனர். முதற்கட்டமாக சாத்தனூர், பெருஞ்சாணி, சோத்துப்பாறை, மணிமுக்தா, வெலிங்டன் உட்பட 15 அணைகளை சுற்றுலாதலமாக மாற்றப்படுகிறது. இந்த அணைகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி, பூங்கா, ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Tags : Department of Water Resources ,Tamil Nadu , 15 dams under the control of the Department of Water Resources are becoming a tourist destination: Government of Tamil Nadu order
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...