×

நேரடி வகுப்பு தொடங்காத நிலையில் தனியார் பள்ளிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தனியார் பள்ளிகள் இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை முதல் தவணையில் 40 சதவீதமும், இரண்டாம் தவணையில் 35 சதவீதம், என 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தான் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினம் தனியார் பள்ளிகள்  தங்களுக்கான கல்விக் கட்டணத்தை முழுமையாக மாணவர்கள் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. கல்விக் கட்டணத்தை எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை இல்லாததால் பெற்றோரும் கல்விக் கட்டணத்தை செலுத்த தயக்கம் காட்டி வந்தனர். அதற்காக பள்ளிக் கல்வித்துறை தற்போது கட்டணம் செலுத்தும் முறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்று காரணமாக கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்த கல்வி ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன என புகார்கள் வருகிறது. தற்போது நிலவும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும். முதல் தவணையில் 40 சதவீதம் கட்டணத்தை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வசூல் செய்யலாம். மீதமுள்ள  35 சதவீத கட்டணத்தை நேரடி வகுப்புகள்தொடங்கிய பிறகு 2 மாதங்களில் வசூல் செய்யலாம். மீதம் உள்ள 25 சதவீத கட்டணத்தை வசூல் செய்வது குறித்து கொரோனா பெருந்தொற்றின் நிலையை பொருத்து அறிவிக்கப்படும்.

Tags : Private schools are required to pay 40 percent of the fee for not starting a live class: School Education Order
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...