×

ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் 43 அமைச்சர்கள் பதவியேற்பு: ரவிசங்கர் பிரசாத், ஜவடேகர், ஹர்ஷவர்தன், பொக்ரியால் உள்பட 12 மூத்த அமைச்சர்கள் பதவி பறிப்பு

* தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் இணை அமைச்சர் ஆனார்
* 36 பேர் புதுமுகங்கள்; 7 பேர் பெண்கள்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் முதல் முறையாக நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ வர்தன், ரமேஷ் பொக்ரியால் போன்ற மூத்த அமைச்சர்கள் உட்பட 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்ய, 43 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில் 36 பேர் புதுமுகங்கள். 7 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் இணை அமைச்சராகி உள்ளார். மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2019ம் ஆண்டில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, கடந்த 2 ஆண்டாக ஒன்றிய அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில், சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் ஒன்றிய அரசு அதிருப்தி அடைந்தது. அதோடு அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், அந்த மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் நெருக்கம் ஏற்படுத்தவும், ஏற்கனவே பல மாநிலங்களில் பாஜ ஆட்சியை பிடிக்க உதவிய சில தலைவர்களுக்கு பதவி வழங்கவும் அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் கடந்த சில வாரங்களாக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அமைச்சரவையில் அதிக புதுமுகங்களுக்கு வாய்ப்பு தர முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, புதிய அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் டெல்லிக்கு நேற்று முன்தினம் அவசரமாக அழைக்கப்பட்டனர். அதோடு, ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடத்த ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் நேற்று காலையில் இருந்து டெல்லியில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் நடந்தன. அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வழிவிடும் வகையில், ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ வர்தன், ரமேஷ் பொக்ரியால், பிரகாஷ் ஜடேகர் உள்ளிட்ட 6 கேபினட் அமைச்சர்கள் உட்பட 12 ஒன்றிய அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். உடனடியாக அவர்களின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, 43 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்த விழாவில்  இவர்கள் பதவியேற்றனர். இதில்,  தற்போது இணை அமைச்சர்களாக உள்ள 7 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றனர். எதிர்பார்த்தபடியே, மபியின் ஜோதிராதித்யா சிந்தியா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால், பீகாரின் பசுபதி குமார் பராஸ் உள்ளிட்டோருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு புதிய அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. 7 பெண்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் அமைச்சரவையில் பெண்களின் மொத்த எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. அதோடு, பாஜவின் 2வது முறை ஆட்சியில் தமிழகத்தில் இருந்து அமைச்சரவையில் யாரும் இடம் பெறாமல் இருந்த நிலையில், தமிழக பாஜ தலைவர் எல். முருகனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

சரியாக மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் நபராக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான நாராயண் ரானே கேபினட் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 15 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இறுதியாக மேற்கு வங்க எம்பி நிஷித் பிரமானிக் பதவியேற்க, அவருக்கு முன்பாக எல். முருகன் பதவியேற்றார். பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பதவியேற்ற அனைத்து அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தார். 43 அமைச்சர்களில் 36 பேர் புதுமுகங்கள் ஆவர்.

* அமைச்சரவை பலம் 77 ஆனது

புதிதாக நேற்று 43 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதில் 36 பேர் புதுமுகங்கள் ஆவர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் பலம் 77 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன் 53 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். ஒன்றிய அமைச்சரவையின் உச்ச வரம்பு 81 ஆகும்.


* ஒன்றிய அமைச்சர்கள் இலாக்கா ஒதுக்கீடு
புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான இலாக்கா நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. அதன் முழு விபரம்:
அமைச்சர்கள்                          :        துறை
பிரதமர் மோடி: பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி மற்றும் அனைத்து முக்கிய கொள்கை சார்ந்த விவகாரங்கள், அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத பிற அனைத்து துறைகள்

* கேபினட் அமைச்சர்கள்
ராஜ்நாத் சிங்                            :     பாதுகாப்பு
அமித்ஷா                              :     உள்துறை, கூட்டுறவு
நிதின் கட்கரி                              :    சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை
நிர்மலா சீதாராமன்                 :    நிதித்துறை மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை
நரேந்திரசிங் தோமர்               :    விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை
ஜெய்சங்கர்                              :     வெளியுறவு
அர்ஜூன் முண்டா                             :     பழங்குடியினர் நலத்துறை
ஸ்மிருதி இரானி                              :    பெண்கள் மற்றம் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
பியூஸ் கோயல்                               :    வர்த்தகம் மற்றும் தொழில்துறை; நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் ஜவுளித்துறை
தர்மேந்திர பிரதான்                 :     கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை
பிரகலாத் ஜோஷி                              :     நாடாளுமன்ற விவகாரம்; நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை
நாராயண் ரானே                              :    சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை
சர்பானந்தா சோனோவால்        :     துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை மற்றும் ஆயுஷ் துறை
முக்தர் அப்பாஸ் நக்வி          :      சிறுபான்மையினர் நலத்துறை
வீரேந்திர குமார்                               :      சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
கிரிராஜ் சிங்                               :      கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை
ஜோதிராதித்யா சிந்தியா            :      விமான போக்குவரத்து
ராமச்சந்திர பிரசாத் சிங்             :      எஃகு துறை
அஸ்வினி வைஷ்ணவ்           :      ரயில்வே; தகவல் தொடர்பு மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்ப துறை
பசுபதி குமார் பராஸ்          :      உணவு பதனிடும் தொழில் துறை
கஜேந்திர சிங் செகாவத்           :      ஜல் சக்தி
கிரண் ரிஜிஜூ                               :      சட்டம் மற்றும் நீதித்துறை
ராஜ்குமார் சிங்                               :      மின்சாரம்; புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை
ஹர்தீப் சிங் புரி                           :      பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு; வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை
மனுசுக் மண்டாவியா           :      சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை; உரம் மற்றும் ரசாயனத்துறை
பூபேந்தர் யாதவ்                               :      சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்; தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை
மகேந்திரநாத் பாண்டே          :      கனரக தொழில் துறை
புருஷோத்தம் ரூபாலா           :      மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை
கிஷண் ரெட்டி                              :      கலாச்சாரம்; சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை
அனுராக் சிங் தாக்கூர்           :      தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை; இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை

* இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)
ராவ் இந்தர்ஜித் சிங்: புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கம் (தனி பொறுப்பு); திட்டம் (தனி பொறுப்பு) மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை இணை பொறுப்பு
ஜிதேந்திர சிங்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு); புவி அறிவியல் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை பொறுப்பு

* இணை அமைச்சர்கள்
ஸ்ரீபத் யஸ்சோ நாயக்          :     துறைமுகம், கப்பல் போக்குவரத்து; சுற்றுலா துறை
பக்கன்சிங் குலஸ்தே         :     எஃகு மற்றும் கிராமப்புற மேம்பாடு
பிரகலாத் சிங் படேல்         :     ஜல் சக்தி மற்றும் உணவு பதனிடும் தொழில்கள்
அஸ்வினி குமார் சவுபே          :     நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம், சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம்
அர்ஜூன் ராம் மேக்வால்      :     நாடாளுமன்ற விவகாரம்; கலாச்சாரத்துறை
வி.கே.சிங்                            :     சாலை மற்றும் நெடுஞ்சாலை; விமான போக்குவரத்து
கிரிஷன் பால்                          :     மின்சாரம்; கனரக தொழில்துறை
தன்வே தாதாராவ்                            :     ரயில்வே; நிலக்கரி, சுரங்கம்
ராம்தாஸ் அத்வாலே      :    சமூக நீதி, அதிகாரமளித்தல்
சாத்வி நிரஞ்சன் ஜோதி      :    நுகர்வோர் விவகாரம்; உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் கிராமப்புற மேம்பாடு
சஞ்சீவ் குமார் பல்யான்      :    மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை
நித்யானந்த் ராய்                          :    உள்துறை
பங்கஜ் சவுத்ரி                          :    நிதித்துறை
அனுப்ரியா சிங் படேல்      :    வர்த்தகம் மற்றும் தொழில்துறை
எஸ்.பி.சிங் பாகேல்                          :     சட்டம் மற்றும் நீதித்துறை
ராஜீவ் சந்திரசேகர்                          :     திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சோபா கரண்ட்லஜி        :     வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை
பானு பிரதாப் சிங் வர்மா      :     சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்
தர்ஷணா விக்ரம் ஜர்தோஷ்       :     ஜவுளி மற்றும் ரயில்வே
முரளீதரண்                           :     வெளியுறவு; நாடாளுமன்ற விவகாரம்
மீனாட்சி லேகி                           :     வெளியுறவு; கலாச்சாரம்
சோம் பர்காஷ்                           :    வர்த்தகம் மற்றும் தொழில்துறை
ரேணுகா சிங் சருதா       :    பழங்குடியினர் நலத்துறை
ரமேஷ்வர் டெலி                           :   பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு; தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
கைலாஷ் சவுத்ரி                           :   வேளாண், விவசாயிகள் நலன்
அன்னபூர்ணா தேவி       :   கல்வித்துறை
ஏ.நாராயணசாமி                              :   சமூக நீதி, அதிகாரமளித்தல்
கவுசல் கிஷோர்                           :   வீட்டு வசதி,  நகர்ப்புற வளர்ச்சி
அஜய் பட்                                               :   பாதுகாப்பு மற்றும் சுற்றுலா
பி.எல்.வர்மா                          :    வடகிழக்கு பிராந்திய மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை
அஜய் குமார்                          :    உள்துறை
தேவுசின் சவுகன்                          :    தகவல் தொடர்பு
பகவந்த் கவுபா                          :    புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி; உரம் மற்றும் ரசாயன துறை
கபில் மோரிஸ்வர் பாட்டீல்      :    பஞ்சாயத்து ராஜ்
பிரதிமா பவுமிக்                          :    சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
சுபாஷ் சர்கார்                          :    கல்வித்துறை
பகவத் கிஷண்ராவ்                          :    நிதித்துறை
ராஜ்குமார் ரஞ்சன் சிங்      :    வெளியுறவு; கல்வித்துறை
பாரதி பிரவின் பவார்      :    சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
பிஷ்வேஸ்வர் துடு                          :    பழங்குடியினர் நலன் மற்றும் ஜல் சக்தி
சாந்தனு தாக்கூர்                          :   துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து
முன்ஜபாரா மகேந்திரபாய்       :    பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்; ஆயுஷ்
ஜான் பர்லா                         :    சிறுபான்மையினர் நலத்துறை
நிஷித் பிரமானிக்                         :    உள்துறை; இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

* எல்.முருகனுக்கு 2 துறைகள் ஒதுக்கீடு
இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக பாஜ தலைவர் எல்.முருகனுக்கு 2 இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சராகவும், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.



Tags : Union ,Ravi Shankar Prasad ,Javadekar ,Harshavardhan ,Pokriyal , Union Cabinet Expansion 43 Ministers Appointed: 12 Senior Ministers Including Ravi Shankar Prasad, Javadekar, Harshavardhan, Pokriyal
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு...