×

மாயமான ரஷ்ய விமானம் கடலில் விழுந்து விபத்து: 28 பயணிகளும் பலி?

மாஸ்கோ:  ரஷ்யாவில் 28 பேருடன் மாயமான விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது.  ரஷ்யாவின் பெட்ரோபாவ்லாக்ஸ்-கம்சாட்கியில் இருந்து பலானா நகருக்கு  ஆன்டோனாவ் ஆன் 26 என்ற விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 22  பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர். பலானா  விமான நிலையத்தில் தரையிறங்க விமானம் தயாரானபோது விமான கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரில் இருந்தும் விமானம் மாயமானதால் விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. விமானம் வந்த பாதையில் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்றது. மேலும் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என அச்சத்தில் கப்பல்களும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கடலோர பகுதியில் இருக்கும் குன்று மற்றும் கடலில் விமானங்களில் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் இரவு என்பதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டு நேற்று காலை மீண்டும் தொடங்கியது. கிழக்கு பகுதியில் விமானவிபத்தில் இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் விமானத்தில் இருந்த ஊழியர்கள், பயணிகள் என யாரும் உயிர்பிழைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கம்சட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடாவ் கூறுகையில், ‘‘நீரில் மிதந்த சடலங்கள் மீட்கப்பட்டது\” என்றார். ஆனால் எத்தனை சடலங்கள் மீட்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.


Tags : Russian plane, crash, passenger, killed
× RELATED இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறல்: 11 ஆயிரம் பேர் வெளியேற்றம்