ஒன்னு போனா ஒன்னு பீதியை கிளப்புது அடுத்து வருகிறது லாம்ப்டா வைரஸ்: டெல்டா வகைகளை விட ஆபத்தானது

புதுடெல்லி: கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தற்போது, ‘லாம்ப்டா’ என்ற வகை 30 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு வகையில் உருமாறி, மக்களை மரண பீதியில் வைத்துள்ளது. இந்தியாவில் 2வது அலைக்கு முக்கிய காரணமாக இருந்த டெல்டா வகை வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளை உலுக்கி வருகிறது. இதனால், பல நாடுளில் இதுவரை இல்லாத அளவில் பாதிப்புகள், இறப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது டெல்டா வைரசின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ‘டெல்டா பிளஸ்’ வகை மிரட்டி வருகிறது.

டெல்டாவை ஒப்பிடுகையில் டெல்டா பிளஸ் வீரியமிக்கதாக இருந்தாலும், குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இதுவரை டெல்டா பிளசுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா 3வது அலை அக்டோபரில் உச்சகட்டமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், இந்திய உட்பட பல்வேறு நாடுகள் 3வது அலை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், டெல்டா வகைகளை விட ஆபத்தான உருமாறிய ‘லாம்ப்டா’ என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரு நாட்டில்தான் இந்த வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு பெருவில் மே மற்றும் ஜூன் மாதங்களில் 82% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பான் அமெரிக்க சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  

இந்த வைரஸ் தற்போது இங்கிலாத்திலும் பரவி உள்ளதாக இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று இங்கிலாந்து வந்த 6 பேருக்கு இந்த வைரஸ் உறுதியாகி உள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை இந்தியாவில் யாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த பதிவும் இல்லை. கடந்த 4 வாரத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இது, விரைவில் மேலும் பல நாடுகளுக்கு பரவும் என அஞ்சப்படுகிறது.

கருப்பு பூஞ்சை மருத்து  ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 17 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ராகேஷ் மல்ஹோத்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதை நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ஜாஸ்மீத் சிங் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்து எவ்வளவு இறக்குமதி செய்யப்பட்டது, இன்னும் எவ்வளவு வர வேண்டி உள்ளது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலை ஆகியவை குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பலி எண்ணிக்கை 930 ஆக சரிவு: ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

* கடந்த 24 மணி நேரத்தில் 43,733 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3 கடியே 6 லட்சத்து 63 ஆயிரத்து 665 ஆகும்.

* ஒரே நாளில் 930 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது.

* நாடு முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 59 ஆயிரத்து 920 ஆக குறைந்துள்ளது.

* இதுவரை 36.13 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>